மின்னல் தாக்கி உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு நிதியுதவி

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணிக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் தலைமையில் உடுவில் பிரதேச செயலர் ஜெயக்காந், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி முரளிதரன், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அபராசுதன், கிராம சேவகர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் அடங்கிய குழுவினர் மின்னல் அனர்த்தம் நிகழ்ந்த  இடத்தினை சென்று பார்வையிட்டதோடு உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கும் சென்றனர்.

இதன்போது சமுர்த்தி பாதுகாப்பு நிதியத்தின் மரணத்திற்கான கொடுப்பனவு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கொடுப்பனவு ரூபா ஒரு இலட்சத்தில்  உடனடியாக பதினைந்தாயிரம் ரூபாவினை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அரசாங்க அதிபர் வழங்கினார்.

மேலும் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கான வீட்டுத்திட்டத்தினை முன்னுரிமை அடிப்படையில் வழங்குமாறும் அரசாங்க அதிபர் பணித்துள்ளார்.

அப்பகுதிகளில் அடிக்கடி மின்னல் தாக்கம் நிகழ்வதற்கான காரணம் பற்றி ஆராய்வதோடு அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கிகள் இயங்கு நிலையில் இருக்கின்றதா மற்றும் உரிய தரத்தில் உரிய முறைப்படி பொருத்தப்பட்டுள்ளதா என உடனடியாக பரிசீலித்து நடவடிக்கையெடுக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

About Thinappuyal News