வடக்கு ஆளுநரை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஈரான் தூதுவர்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவோயிட் மெக்கின்னனுக்கும் (Mr. Devoid McKinnon) வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.

வடமாகாணத்தில் கனேடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளகூடியதான அபிவிருத்தி உதவிகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கனேடிய அரசாங்கத்தின் ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளரின் இலங்கை வருகை குறித்தும், இவ்வருகையின்போது கனேடிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்க கூடியதான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இதேவேளை  ஆளுநருக்கும் இலங்கைக்கான ஈரானின் தூதுவர் மொகமட் ஜெய்ரி அமிரானி (Mr. Mohammad Zaeri Amirani) இடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் இடம்பெற்றது.

வடமாகாணத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் கரிசனைக்கும் தொலைநோக்கிற்கும் அமைய மத்திய மாகாணத்திலிருந்து நிலக்கீழ் குழாய் வழியாக வடமாகாணத்திற்கு குடிநீரினைக் கொண்டுசெல்வதற்கு ஈரானிய அரசின் உதவி இதன்போது ஆளுநரால் கோரப்பட்டது.

இதற்கு சாதகமான சமிக்கை வெளியிட்ட ஈரானிய தூதுவர் முதற்கட்டமாக இது தொடர்பிலான சாத்தியமான வழிகளை ஆராயும் பொருட்டு இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற  ஈரானின் மூன்று நிறுவனங்களை  எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தன்னார்வ ரீதியில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக  குறிப்பிட்டார்.

 

 

About Thinappuyal News