தீயில் சேதமாகிய தேவாலயம் 5 வருடங்களில் சீரமைக்கப்படும் – பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸின் பாரிஸிலுள்ள நோட்ரே டோம் பேராலயத்தில் நேற்று முன்தினம் பயங்கர தீப்பரவல்  ஏற்பட்ட நிலையில், அவை 5 வருடங்களில் சீரமைக்கப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோட்ரே-டோமில் உலகப் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம் அந்நாட்டின் வரலாற்று சின்னமாக பார்க்கப்படுகிறது.

குறித்த தேவாலயத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு திடீரென தீப்பரவியுள்ளது. சில நிமிடங்களில் தீ, தேவாலயம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தீ மிக விரைவாக ஏனைய   இடங்களுக்கும் பரவியதால் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் பலத்த சேதமடைந்து இடிந்து விழுந்தன. அத்துடன் தேவாலயத்தின் 2 கோபுரங்களில் ஒன்று முற்றிலுமாக எரிந்து போனது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் நிலைமையை நேரில் பார்த்து விட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த தீப்பரவல்  ஒரு மிக மோசமான சோக நிகழ்வு, இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து புகழ்பெற்ற இந்த தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவோம்.

இதற்காக சர்வதேச அளவில் நிதி திரட்டும் பணி தொடங்கப்படும். தேவாலயத்தை ஏற்கெனவே இருந்ததைவிட மிக அழகாக கட்டுவோம். அடுத்த 5 வருடத்திற்குள் தேவாலயம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புகிறேன். மனித தவறுகளால் ஏற்படும் பாதிப்புகளை நிறைய முறை சரிசெய்துள்ளோம். அந்த வகையில் இதனையும் விரைந்து சரிசெய்வோம் என்றார்.

குறித்த தீப்பரவலுக்கு பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்துவரும் நிலையில், தேவாலயத்தை புதுப்பிப்பதற்கான நிதியும் குவிந்து வருவதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

About Thinappuyal News