8 வருடத்திற்கு பின்னர் காட்டு யானைகளை மீள் கணக்கெடுப்பு : வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்

8

நாடளாவிய ரீதியில் உள்ள காட்டு யானைகளை கணக்கெடுப்பதற்கு வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் காட்டுயானைகள் நடமாடும் இடங்களை கொண்டு இந்த கணக்கெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

காட்டு யானைகளை கணக்கெடுப்பு பணிகள் 8 வருடத்திற்கு பின்னர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 229 நிலையங்களில் கணக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. மேலும் 7 ஆயிரத்து 316 அதிகாரிகள் கடமையில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

இந்நிலையில் இந்த கணக்கெடுப்பின் போது வெளித்தரப்புகளையும் இணைத்துக் கொள்ள வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய  காட்டு யானைகள் கணக்கெடுப்பில் பங்குக் கொள்ள விரும்பும் நபர்கள் 011- 2888585 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு பதிவினை செய்துக் கொள்ள முடியும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை காட்டுயானைகள் தொடர்பான கணக்கெடுப்புகள் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் கடந்த 2011 ஆம் ஆண்டே இறுதியாக மேற்கொள்ளப்பட்டன. இதன் போது நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 879 காட்டுயானைகள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE