இறக்குமதி செய்யப்படவுள்ள விசேட பஸ்கள்

5

அங்கவீனர்களுக்கென விசேட பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், மேலும் 2000 பஸ்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக,  போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு –  மருதானை முதல் நுகேகொடை வரையிலான மெட்ரோ ரயில் சேவைகளை விரைவில்  நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

தகவல் திணைக்களத்தில் இது தொடர்பிலான விசேட செய்தியாளர் மாநாடொன்று இடம்பெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,

அதி சொகுசு பஸ்கள் 35 ஐ இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இதற்கிணங்க, அரைச் சொகுசு பஸ்களும் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

இலங்கையிலுள்ள இ.போ.ச. பஸ் டிப்போக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஊழியர்களின் பதவி உயர்வு உள்ளிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை பதவி உயர்வு வழங்காதவர்களுக்கு 1, 2, 3 ஆம் தரத்தில் பதவி உயர்வுகளை வழங்குவதற்கு திறைசேரியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

56 ரயில் பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. பாதுக்க – அவிசாவளை, ராகம – வெயாங்கொடை  மற்றும் கொழும்பு – பாணந்துறை, களுத்துறை போன்ற ரயில் பாதைகளும் இதில் உள்ளடங்குகின்றன.

நாட்டுக்கு 3,000 பஸ்கள் தேவைப்படுகின்றன. தற்போது சேவைகளிலுள்ள பஸ்கள் மிகவும் பழைமையானவை. முதலீட்டாளர்கள் உதவியுடன் பஸ்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இவை ஆறு  வருடங்களுக்குப் பின்னர் முழுமையாக அரசாங்கத்துக்கு உரித்தாகும். அங்கவீனர்களுக்கென விசேட சொகுசு பஸ்களை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மாதாந்தம் 15 பஸ்கள் திருத்தியமைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அதிவேக வீதிகளில் ஆறு சொகுசு பஸ்கள் சேவைகளில்  ஈடுபட்டு வருகின்றன. மேலும் ஒன்பது பஸ்களை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எமக்கு பஸ்களைப் போன்றே பஸ் சாரதிகளுக்கான பற்றாக்குறையும் உள்ளது.

பல இ.போ.ச.  பஸ் டிப்போக்களில் சாரதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அந்தந்தப் பகுதிகளில் உள்ளவர்களை அதற்காக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SHARE