கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நான்கு வாகனங்களை மோதி சென்றதில் ஆறு பேர் படுகாயம்!

16

திருகோணமலை-புல்மோட்டை பிரதான வீதி அலஸ்தோட்டம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து நான்கு வாகனங்களை மோதி சென்றதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் திருகோணமலை நகர் பகுதியிலிருந்து நிலாவெளி  நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு காரொன்று அலஸ்தோட்டம்  பகுதியில் ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிளுடன் மோதி குறித்த மோட்டார்  சைக்கிளின் பாகம் இன்னுமொரு  காருடன் மோதி அக்காருக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து  வேகக்கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் முச்சக்கர வண்டியையும் துவிச்சக்கர வண்டியையும் மோதிவிட்டு அருகில் நின்ற பெண்ணுடன் மோதியதாகவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து கோபம் கொண்ட பிரதேச மக்கள் காருக்கு தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் திருகோணமலை- புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ. சந்திரகுமார் (28 வயது) உப்புவெளி பகுதியைச் சேர்ந்த பீ. ரேவதி (60 வயது) வரோதய நகர் பகுதியைச் சேர்ந்த பீ. ஓவியா (16வயது) சதீஷ்குமார் (32 வயது) ஜே. பிஹிலா (23வயது) மற்றும் ஜே. மிதுலா (25வயது) ஆகியோர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை விபத்து சேவைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் அத்தோடு, குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE