வடக்கு மற்றும் கிழக்கு எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்!

வடக்கு மற்றும் கிழக்கு எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்கள் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் இன்று (15) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

பத்து வருட காலங்களாக போராடியும் இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் எதுவித பதிலும் வழங்காத  நிலையில்   சர்வதேசமாவது  நியாயமான பதிலை கூற வேண்டும் எனக் கோரியே இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

திருகோணமலை – அம்பாறை மட்டக்களப்பு – மன்னார் – முல்லைத்தீவு – யாழ்ப்பாணம்- கிளிநொச்சி – மற்றும் வவுனியா- மாவட்டங்களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திலீடுபட்டவர்கள்,

காணாமல் போனோர் அலுவலகம் கண்துடைப்பா?

வெள்ளை வேனில் கொண்டு சென்றவர்கள் எங்கே?

பக்கச் சார்பற்ற நீதிவிசாரணை வேண்டும்!

கையில் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே!

காணாமல்போன எமது உறவுகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்!

கடத்தப்பட்ட எமது உறவுகள் எங்கே!

சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கின்றாய்!

போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

 

About Thinappuyal News