கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது: இரண்டு வாள்களும், மோட்டார் சைக்கிளொன்றும் மீட்பு

4

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து இரண்டு வாள்களும், மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாதாள உலக குழு உறுப்பினர் என அறியப்படும் 32 வயதான  சம்பத் நிரோஷன் எனப்படும் ஆனமாலு ரங்க, 22 வயதுடைய மற்றொருவருமே நேற்றைய தினம் மாதம்பிட்டி மயானம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று மாதம்பிட்டிய பொது மயானத்தில் இடம்பெற்ற இறுதிக் கிரியை ஒன்றில் பங்கேற்க அப்பகுதிக்கு வந்துள்ளனர். இதன்போதே முச்சக்கர வண்டியொன்றில் வந்த நால்வர் பாரிய வாள்களை கொண்டு கொடூரமாக இவ்விருவரையும் வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த மேற்படி இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆனமாலு ரங்க, 2016 ஆம் ஆண்டு மட்டக்குளி சமிட்புரவின் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக குழுவொன்றின் தலைவனான சூட்டின் உக்குவாவின் குழுவைச் சேர்ந்தவர் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

SHARE