27

 

ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி: யாருடைய வெற்றி வாய்புக்களை அதிகப்படுத்தும்?

ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது போட்டியாளரும் களத்தில் குதித்து விட்டார். கடந்த வாரம் காலிமுகத்திடலில் ஜேவிபி கூட்டிய கூட்டம் பிரமாண்டமானது. இரண்டு பெரிய கட்சிகளுக்கும் செய்திகளை உணர்த்துவது. கூட்டத்துக்கு வந்த எல்லாருமே வாக்களிப்பார்களா? என்ற கேள்வி இங்கு முக்கியம். ஆனாலும் இரண்டு பெரிய கட்சிகளும் வழமையாக கூட்டத்திற்கு ஆட்களை திரட்டும் பொழுது கைக்கொள்ளும் கேவலமான உத்திகளை ஜேவிபி கைக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

காசு கொடுத்து, குடிக்கச் சாராயம் கொடுத்து அவர்கள் கூட்டத்துக்கு ஆட்களைத் திரட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த கூட்டம் அக்கட்சியின் கீழ்மட்ட வலைப்பின்னல் ஊடாக திரட்டப்பட்டது என்று கருதப்படுகிறது.

அனுரகுமார திசாநாயக்க அண்மைக் காலங்களில் இலங்கைத்தீவில் துருத்திக் கொண்டு மேலெழுந்த ஓர் அரசியல்வாதி ஆகும். மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய ஆட்சி குழப்பத்தின் போது அனுரகுமார திசநாயக்க நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்காக சரியான முடிவுகளை எடுத்தார் என்று கருதப்படுகிறது.

நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்கு கடந்த ஒக்டோபர் மாதம் அவர் எடுத்த முடிவு மட்டும் போதாது. அதைவிட ஆழமான பொருள் இனப்பிரச்சினை தொடர்பில் அவர் என்ன முடிவை எடுக்கிறார் என்பதில்தான் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அவர் பாதுகாத்தாரா இல்லையா என்பதைப் பற்றிக் கூற முடியும்.

எனினும் இரண்டு பெரிய கட்சிகளும் ஆட்சி குழப்பத்தால் தளம்பிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அனுரகுமார திசாநாயக்க ஒரு தீர்மானிக்கும் சக்தி போல தோன்றினார்.

இப்பொழுதும் அவர் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மேலெழுவாரா? – அவருடைய பிரவேசம் யாரை அதிகம் பாதிக்கும்? அல்லது யாரை பலப்படுத்தும்?
கோத்தபாயவின் வாக்கு வங்கி எனப்படுவது ஏனைய வேட்பாளர்களோடு ஒப்பிடுகையில் அதிகம் ஸ்திரமானது. அந்த வாக்கு வங்கியில் உடைவை ஏற்படுத்த அனுரகுமாரவால் முடியுமா?

ஏனெனில் 2009இல் பெற்ற யுத்த வெற்றியோடு இனவாதத்துக்கு மஹிந்தவை தவிர வேறு யாரும் தலைமை தாங்க முடியாது என்ற நிலைமை கடந்த 10 ஆண்டுகளாக நிலவி வருகிறது. யுத்த வெற்றி வாதத்துக்கு எதிராக அதைவிடப் பெரிய தீவிரமான இனவாத நிலைப்பாட்டை எடுக்க வேறு எந்தக் கட்சியாலும் முடியாது.

எனவே ஒன்றில் ராஜபக்ச அணியோடு இணைய வேண்டும். இல்லையென்றால் தனித்துச் சென்று சற்று நடுவே நிற்கும் மூன்றாவது வழி ஒன்றை தெரிந்தெடுக்க வேண்டும். அனுரகுமார அப்படி ஒரு வழியைத்தான் தெரிந்தெடுத்து இருக்கிறாரா?

காலிமுகத்திடலில் அவர் ஆற்றிய உரையில் அபிவிருத்தியை பற்றி பேசுகிறார். ஊழலற்ற ஆட்சியை பற்றி பேசுகிறார். ஆனால் இனப்பிரச்சினை என்ற ஒன்றைப் பற்றி பேசவே இல்லை. அதாவது இனப்பிரச்சினைக்கு அவரிடம் தீர்வு இல்லை. அல்லது அபிவிருத்திதான் தீர்வு அல்லது வர்க்கப் புரட்சி தான் தீர்வு?

அவருடைய காலிமுகத்திடல் உரையைப் பொறுத்தவரை அபிவிருத்தியைத்தான் அவர் தீர்வாக முன்வைப்பது தெரிகிறது. ஆயின் கோத்தபாயவுக்கும் அவர்களுக்கும் இடையே வேறுபாடு என்ன?

‘இந்த நாடு சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் குப்பைக் கோட்டையாக மாறியுள்ளது. எமது எதிர்கால குழந்தைகளுக்கு விஷம் இல்லாத ஒரு பழத்தையும் விஷம் இல்லாத ஒரு சொட்டு நீரையும புதிய காற்றின் சுவாசத்தையும் கொடுப்பதற்காகவே நாங்கள் இந்த அரசியல் போராட்டத்தை நடத்துகின்றோம்’ என்று அனுரகுமார கூறுகிறார்.

ஆனால் விஷமில்லாத பழத்தையும் விஷமில்லாத சொட்டு நீரையும் வழங்குவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளிக்கும் அவர் விஷமில்லாத அரசியல் குறித்து ஏன் வாக்குறுதி அளிக்கத் தவறினார்? – அவருக்குள் இருக்கும் விஷத்தை அவரால் நீக்க முடியவில்லையா?

இலங்கை தீவின் விஷம் எனப்படுவது இனவாதம்தான். இச்சிறிய தீவைக் கட்டி எழுப்பியது மூன்று இனங்களும்தான் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதுதான் விஷம்.

இம்மூன்று இனங்களையும் இத்தீவைக் கட்டி எழுப்பிய சக நிர்மாணிகளாக ஏற்றுக்கொண்டு ஓர் அரசியல் தீர்வை முன்மொழிய ஏன் ஜே.வி.பி.யால் முடியவில்லை?  ரணில் மைத்திரி கூட்டு அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட யாப்பு உருவாக்கக் குழுவிற்கு ஜே.வி.பி. வழங்கிய பரிந்துரையில், ஆளுநரின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. இது தொடர்பில் தமிழ் மக்களுக்கு அனுர கூறும் பதில் என்ன?

வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராகவும் சுனாமிப் பொதுக் கட்டமைப்புக்கு எதிராகவும் வழக்கு தொடுத்த ஒரு கட்சியே ஜே.வி.பி. தமிழ் மக்களின் தாயகக் கோட்பாடு தொடர்பில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்ன?

இலங்கைத்தீவில் இனப்பிரச்சினைக்கு பொருத்தமான ஒரு தீர்வை முன்வைக்காதவர் நாட்டின் இறைமையை பாதுகாக்க முடியாது. கோட்டாபய கூறுவதுபோல வெளிநாடுகள் தலையிடுவதை தடுப்பதற்கும் அவர்களால் முடியாது. ஏனெனில் இனப்பிரச்சினை என்ற ஒன்று உள்ளவரை இச்சிறிய தீவில் வெளிச் சக்திகள் தலையிட்டுக் கொண்டே இருக்கும்.

எனவே ஜே.வி.பி. முதலில் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டும். காலிமுகத் திடலில் அனுரகுமார பேசும் போது இனப்பிரச்சினை தொடர்பாக எதையுமே தெளிவாகவும் திட்டவட்டமாகவும் குறிப்பிடவில்லை.

இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்காத எந்த ஒரு தென்னிலங்கை கட்சியும் மாற்றத்திற்கான ஒரு புதிய அரசியலை முன்னெடுக்க முடியாது. எனவே ஜே.வி.பி. முன்னெடுக்கும் அரசியலில் புதிய உள்ளடக்கம் எதுவும் இல்லை. இரண்டு பெரிய கட்சிகளையும் விட ஜே.வி.பி. புதிதாக எதையும் கூறிவிடவில்லை.

யுத்த வெற்றிக்குப் பின் ராஜபக்ச அணியை மேவிக் கொண்டு இனவாதத்துக்கு தலைமை தாங்க ஜே.வி.பி. ஆல் முடியாது. அதனால் ரணிலுக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையே ஒரு வழியை அவர்கள் கண்டு பிடிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அதில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக மூன்றாவது அணியாக ஜே.வி.பி. போட்டியிடுவதன் மூலம் இரண்டு பெரிய கட்சிகளினதும் வெற்றி வாய்ப்புகளை சவால்களுக்கு உள்ளாக்கலாம்.

இது ராஜபக்சக்களை ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்காது. ஏனெனில் அவர்கள் மிகத் தெளிவாக சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கு தலைமை தாங்குகிறார்கள். ஆனால் அனுரகுமாரவின் பிரவேசம் ஐக்கிய தேசிய்க கட்சியை பாதிக்கும். ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியைத் தீர்மானித்த வாக்குகளில் ஜே.வி.பி.யின் ஆதரவு வாக்குகளுக்கும் ஒரு பங்கு உண்டு.

இம்முறை அனுரகுமார தனியாகக் கேட்பதால் அந்த வாக்குகள் மஹிந்தவுக்கு எதிரான அணிக்குப் போகாது. எனவே அனுர குமாரவின் பிரவேசம் ரணில் அணியைத்தான் பாதிக்கும்.

அதேசமயம் அனுரகுமாரவும் வெற்றி பெறப் போவதில்லை. ஏனெனில் ஜே.வி.பி.யின் வழமையான வாக்கு வங்கியின் படி 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர்களால் பெறமுடியாது. அவர்கள் மட்டுமல்ல இரண்டு பெரிய கட்சிகளும் கூட ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துதான் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறலாம் என்ற நிலைமையே கடந்த தேர்தலின் போது காணப்பட்டது.

எனவே ஜே.வி.பி. இம்முறை வெற்றியை நோக்கிப் போட்டியிடவில்லை. மாறாக இரண்டு பெரிய கட்சிகளையும் குழப்பும் நோக்கத்திலேயே போட்டியிடுகிறது. இதன்மூலம் எதிர்காலத்தில் தமது கட்சியை மேலும் பலப்படுத்த முடியுமா என்று அவர்கள் சிந்திக்கக் கூடும். ஆனால் இரண்டு பெரிய கட்சிகளையும் அவர்கள் குழப்பினால் இதில் அதிகமாக குழம்பப் போவது மஹிந்தவுக்கு எதிரான அணியின் வாக்கு வங்கிதான்.

16.08.2019 அன்று ஜேவிபியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலர் ரில்வின் சில்வா பின்வருமாறு கூறியிருந்தார்…… “மகிந்த ராஜபக்ஷவின் முகாமை பிரதிநிதித்துவம் செய்யும் வேட்பாளரை கட்டாயம் தோற்கடித்தாக வேண்டும். அது கோட்டாபய மீது இருக்கும் பயத்தினால் அல்ல.

மகிந்த ராஜபக்ஷ அணியில் கேடுகெட்ட துஷ்டத்தனமான அரசியல் கலாசாரம் இருக்கிறது என்பதை நாங்கள் தொடர்ச்சியாக கண்டுள்ளோம். அவர்களின் பின்னால் இருப்பவர்கள், படுமோசமான மோசடிக்கார்களாகும், அவர்களால், இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டுகின்ற, மத வாதத்தை தூண்டுகின்ற, ஊழல் மோசடிகளுக்கு எதுவிதமான வெட்கமோ பயமோ, சூடுசொறணையோ இல்லாத, சட்டத்திற்கு புறம்பாக செயற்பட முயற்சிக்கின்ற, அரசியல் தாற்பரியங்களை புறக்கணிக்கின்ற, நமது நாட்டின் சகலவிதமான குற்றாசாட்டுகளுக்கும் பொறுப்பானவர்கள்தான் ராஜபக்ஷாவை சூழந்துள்ளனர்.

அதனால் அந்த அரசியல் கலாசாரத்தை பின்னணியாக கொண்ட இவர்களை தோற்கடித்தாக வேண்டுமென நாங்கள் திடமாக நம்புகின்றோம்’….என்று.

ஆனால் நடைமுறையில் மூன்றாவது தரப்பாக ஜே.வி.பி களமிறங்கியிருப்பது மகிந்தவுக்கு எதிரான அணியைத்தான் ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்கப் போகிறது. தான் வெல்ல போவதில்லை என்பதை நன்கு தெரிந்திருந்தும் இரண்டு பெரிய கட்சிகளினதும் வெற்றி வாய்ப்புகளை குழப்பும் விதத்தில் ஜேவிபி களமிறங்கியிருக்கிறது.

ஜேவிபி இவ்வாறு இரண்டு பிரதான கட்சிகளினதும் வாக்குகளை உடைப்பது போல தமிழ் தரப்பும் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் இரண்டு பெரிய கட்சிகளையும் குழப்பினால் என்ன? அப்போது வேட்பாளர் வெற்றி பெறப்போவதில்லை. அதேசமயம் இரண்டு பிரதான வேட்பாளர்களும் பெறக்கூடிய வெற்றியை அவர் தீர்மானிக்கக் கூடும்.

அதன் மூலம் தமிழ் மக்களே இலங்கைத்தீவில் தீர்மானிக்கும் சக்திகள் என்பதனை மீண்டும் ஒரு முறை உலகத்துக்கு உணர்த்தலாம். மேலும் இரண்டாவது விருப்பத் தெரிவு வாக்கினை பிரதான வேட்பாளர்களில் யாராவது ஒருவருக்கு அளிப்பதன் மூலம் அவருடைய வெற்றியை தமிழ் மக்களே தீர்மானிக்கலாம். இது போன்ற ஒரு தேர்தல் வியூகத்தை வகுப்பதற்கு தமிழ் தலைவர்கள் தயாரா?


அரசியல் ஆய்வாளர்
SHARE