இலங்கையிடம் கடும் சவாலை எதிர்கொண்ட வட கொரியா

17

கத்தார் 2022 உலகக் கிண்ணம், சீனா 2023 ஆசிய கிண்ணம் ஆகியவற்றின் இறுதிச் சுற்றில் விளையாடுவதற்கு முன்னோடியாக ஆசிய வலயத்தில் நடைபெற்று வரும் தகுதிகாண் இராண்டாவது சுற்றின் எச் குழுவுக்கான முதலாம் கட்டப் போட்டியில் இலங்கையிடம் கடும் சவாலை எதிர்கொண்ட வட கொரியா 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.

கொழும்பு குதிரை  ப் பந்தயத்திடலில் நேற்று இரவு மின்னொளியில் நடைபெற்ற இப் போட்டியின் 67ஆவது நிமிடத்தில் ஜெங் குக் சொல் போட்ட கோல், வட கொரியாவின் வெற்றி கோலாக அமைந்தது.

துர்க்மேனிஸ்தானுக்கு எதிரான தனது முதலாவது போட்டியில் பெரும் தடுமாற்றத்துக்கு மத்தியில் 0 க்கு 2 என தோல்வி அடைந்த இலங்கை, வித்தியாசமான அணியாக வட கொரியாவை எதிர்த்தாடியது.

மறுபுறத்தில் உலக கால்பந்தாட்ட அணிகள் தரவரிசையில் 118 ஆவது இடத்திலுள்ள வட கொரியா, தனது ஆரம்பப் போட்டியில் லெபனானை 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டிருந்ததால், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கோல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இலங்கை அணி போட்டியின் முதலாவது பகுதியில் திறமையாக விளையாடி வட கொரிய அணியைக் கட்டுப்படுத்திய வண்ணம் இருந்ததுடன் அவ்வப்போது எதிரணி எல்லையையும் ஆக்கிரமிக்க செய்தது.

போட்டியின் முதலாவது பகுதியில் இலங்கை கோல் எல்லையை ஆக்கிரமித்த வட கொரியா கோல் போடுவதற்கு எடுத்த நான்கு (14 நி., 29 நி., 31 நி. 33 நி., 36 நி.)முயற்சிகளை இலங்கை கோல்காப்பாளர் சுஜான் பெரேரா மிக அலாதியாக முஷ்டியால் திசை திருப்பி பலத்த பாராட்டுதல்களைப் பெற்றார்.

போட்டியின் 14ஆவது, 27ஆவது நிமிடங்களில் இலங்கைக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளை அணித் தலைவர் கவிந்து இஷான் கோட்டை விட்டார். அதேபோன்று திலிப் பீரிஸ் எடுத்த முயற்சியும் கைகூடாமால் போனது.

இதினிடையே இலங்கையின் பின்கள வீரர்களான பியூஸ்லாஸ், ஹர்ஷ பெர்னாண்டோ, மனரம் பெரேரா, ஜூட் சுபன் ஆகியோரும் அவ்வப்போது வட கொரியாவின் முயற்சிகளைத் தடுத்த வண்ணம் இருந்தனர்.

இடைவேளையின் பின்னர் வட கொரியா எதிர்த்தாடும் உத்தியை அதிகமாகக் கையாண்ட அதேவேளை, இலங்கை அணி தடுத்தாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதன் காரணமாக வட கொரிய அணியின் ஆதிக்கம் சற்று அதிகரித்தது. எவ்வாறாயினும் இலங்கை பின்கள வீரர்களின் தடுத்தாடும் வியூகங்களும் கோல் காப்பாளர் சுஜான் பீரிஸின் சாமர்த்தியமும் வட கொரியாவின் முயற்சிகளை முறியடித்த வண்ணம் இருந்தது.

எனினும் போட்டியின் 67ஆவது நிமிடத்தில் இடது கோடியிலிருந்து மாற்று வீரர் ரி செங் ஹோ பரிமாறிய பந்தை நோக்கித் தாவிய ஜெங் குக் சொல் மிகவும் அலாதியாக தலையால் முட்டி வட கொரியாவின் கோலைப் புகுத்தினார். இதுவே வட கொரியாவின் வெற்றி கோலாக அமைந்தது. பின்கள வீரரான சொல், எதிர்த்தாடுவதிலும் திறமையாக செயற்பட்டதுடன் முன்களத்துக்கு நகர்ந்து இந்த கோலைப் போட்டமை விசேட அம்சமாகும்.

இதனைத் தொடர்ந்து உபாதைக்கு மத்தியிலும் சுஜான் பெரேரா மேலும் 3 கோல் போடும் வாய்ப்புகளைத் தடுத்தார். அன்றேல் வட கொரியாவின் கோல் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

ஒட்டுமொத்தத்தில் வட கொரியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் ஆற்றல் வெகுவாக முன்னேறியிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆனால் மத்திய கள வீரர்களின் பந்துபரிமாற்றத் திறமை இன்னும் அதிகரிப்பது அவசியமாகும்.

SHARE