ஆஷஸ் கிண்ணத்தை தக்கவைத்துக் கொண்ட அவுஸ்ரேலிய அணி

11

ஆஷஸ் கிண்ணத்தை அவுஸ்ரேலிய அணி தக்கவைத்துக் கொண்டதில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு மட்டுமல்லாது, சிறப்பாக செயற்பட்ட பந்துவீச்சாளர்களுக்கும் பங்கு உண்டு என அவுஸ்ரேலியாவின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதன் மூலம் ஆஷஸ் கிண்ணத்தையும் தக்கவைத்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், அவுஸ்ரேலிய வீரர் ஸ்மித்தின் துடுப்பாட்டம். அவர் மூன்று டெஸ்டில் ஐந்து இன்னிங்சில் மூன்று சதங்கள் உட்பட 671 ஓட்டங்களைக் குவித்துள்ளார். சராசரி 134.20 ஆகும்.

ஆஷஸ் கிண்ணத்தைத் தக்க வைக்க ஸ்மித்தின் துடுப்பாட்டம் தான் முக்கிய காரணம் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அவருக்கு இணையாக பாராட்டை பெற அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தகுதியானவர்கள் என ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொண்டிங் மேலும் கூறுகையில் ”ஸ்மித்தின் சிறந்த ஆட்டத்தை பற்றிதான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த பந்து வீச்சாளர்களும் அபாரமான செயற்பட்டார்கள். இந்த போட்டியில் மாறுபட்ட பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள்.

இங்கிலாந்து பந்து வீச்சைவிட ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹசில்வுட், நதன் லயோன் ஆகியோரின் பந்து வீச்சு உயர்வாக இருந்தது. அவுஸ்ரேலியாவின் பந்து வீச்சை விட இங்கிலாந்தின் பந்து வீச்சில் அதிக அளவில் குறைபாடு இருந்தது” என்றார்.

SHARE