அவுஸ்ரேலிய அணி மீதும் அவமானகரமான குற்றச்சாட்டுக்கள்

11

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட இவ்வருடத்திற்கான ஆஷஸ் தொடரைத் தக்கவைத்துக் கொண்டமையானது, கடந்த 18 மாத சோதனைகளை மறக்க மிகமிக முக்கியமானது என அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவுஸ்ரேலிய அணி, அங்கு டெஸ்ட் போட்டியின் போது பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தை எதிர்கொண்டது.

இதனால், அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், துணைத்தலைவர் டேவிட் வோனர், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பான்கிராஃப்ட் ஆகியோர் ஒருவருட தடைக்கு உள்ளானார்கள்.

அதுமாத்திரமல்லாமல், அவர்கள் மீதும் அவுஸ்ரேலிய அணி மீதும் அவமானகரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இந்நிலையில், ஒரு வருட தடைக்குப் பின்னர் உலகக் கிண்ண அணிக்காக ஸ்மித் மற்றும் வோனர் ஆகியோர் உள்வாங்கப்பட்டனர்.

தற்சமயம், ஆஷஸ் போட்டிகளுக்காக ஒரு வருட தடையை முடித்துக்கொண்ட மூவரும் மறுபடியும் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியுள்ளனர்.

ஆஷஸ் தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் முடிவடைந்துள்ள நிலையில் அவுஸ்ரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. கடைசி போட்டியில் தோல்வியடைந்தாலும் கிண்ணத்தை இழக்காது.

கடந்த முறை அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை அவுஸ்ரேலியா கைப்பற்றியிருந்தது. இதனால் 2001 க்குப் பிறகு ஆஷஸ் கிண்ணத்தை அவுஸ்ரேலியா தக்க வைத்துள்ளது.

”18 மாதங்கள் கழித்து தற்போது ஆஷஸ் தொடரை தக்க வைத்திருப்பது மிகமிக முக்கியமானது. இந்த வெற்றியால் அவுஸ்ரேலிய அணி தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பந்தைச் சேதப்படுத்திய சம்பவத்தை தற்போது பின்னுக்கு தள்ள முடியும்” என்று மெக்ராத் தெரிவித்துள்ளார்.

SHARE