நிரந்தர பயிற்றுவிப்பாளரைத் தேடும் மேற்கிந்திய தீவுகள் அணி

13

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு நிரந்தரமான தலைமைப் பயிற்சியாளர் இல்லாத நிலையில், புதியவர் ஒருவரைத் தேடுவதற்கான நடவடிக்கையை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரிச்சட் பைபஸ் கடந்த ஏப்ரல் மாதம் அதிரடியாக பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னர், அணியின் முன்னாள் தலைவர் ஃயொயிட் ரைபெஃர் தற்காலிக பயிற்சியாளராக செயற்பட்டுவருகின்றார்.

இந்த நிலையில், நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு முன்பதாக நிரந்தரமான ஒரு பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை ஈடுபட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளின் ஒருநாள் மற்றும் ருவென்டி 20 போட்டிகளுக்கான தலைவராக கடந்த திங்கட்கிழமை முன்னணி சகலதுறை வீரர் கிரோன் பொலார்ட் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான ஒருநாள் அணியும், கார்லெஸ் பிரத்வைட் தலைமையிலான ‘ருவென்டி 20’ அணியும், சரியான பெறுபேறுகளை வெளிப்படுத்தத் தவறியதை அடுத்தே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே, புதிய தலைவரை அறிவித்த அதே தினத்தில், புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தெரிவு செய்வதற்கான கட்டமைப்பு மற்றும் கொள்கைகளையும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களையும் சபை கோரியுள்ளது. அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதிக்கு முன்பதாக விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தெரிவுக்கொள்கையின் அடிப்படையில் தேசிய அணிக்கான வீரர்கள் 6 பிரிவுகளின் கீழ் சோதனையிடப்பட்டு தெரிவு செய்யப்படவுள்ளனர். அதற்கமைய, அவர்களுடைய விளையாடும் திறன், உடற்தகுதி, ஈடுபாடு உள்ளிட்ட விடயங்கள் கருத்தில் கொள்ளப்படவுள்ளன.

அணியில் விளையாடும் இறுதிப் பதினொருவரை தலைமைத் தெரிவாளர், தலைமைப்பயிற்சியாளர் மற்றும் அணித்தலைவர் தெரிவு செய்வார்கள் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் பிரதித் தலைவர் தெரிவித்துள்ளார்.

SHARE