நிதி இடைநிறுத்தப்பட்டமையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கல்முனை கல்வி வலயம், சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி இடை நிறுத்தப்பட்டுள்ளமையைக் கண்டித்து இன்று (12) கல்முனை வலயகல்வி அலுவலகத்தின் முன்னால்  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு கல்வியமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ஒரு கோடி 90 இலட்சம் ரூபா பணத்தை இடைநிறுத்தி வேறு பாடசலைக்கு கொண்டு செல்ல அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறி கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வரும் போராட்டத்தின் ஒரு அங்கமாக  இது இடம்பெற்றது.

மாகாண கல்விப்பணிப்பாளர் இன்று தனது நண்பர் ஒருவரின் பிரியாவிடை நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள கல்முனைக்கு சென்றுள்ளார். அச் சந்தர்ப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் எதிர்வரும் திங்கட்கிழமை இப்பாடசாலை விடயம் தொடர்பாக  கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடல் தொடர்பான கடிதத்தை பெற்றுச் செல்ல அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளருக்கு கல்முனை வலய கல்வியதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதனையறிந்த பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மாகாண கல்வி பணிப்பாளரை சந்திக்க மேற்கொண்ட முயற்சி கைகூடாத நிலையில் காரியாலய முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

About Thinappuyal News