மா விலை குறைக்கப்படாமல் பாண் விலையை குறைக்க முடியாது – பேக்கரி உரிமையாளர் சங்கம்

25

கோதுமை மாவின் விலையைக் குறைப்பதற்கு வாழ்க்கை செலவு குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதால் பாண் விலை குறைக்கப்பட வேண்டும் என்று  கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ  ஹரிசன் பேக்கரி உரிமையாளர் சங்கத்திடம் வேண்டு கோள் விடுத்திருக்கிறார்.

எனினும் இது குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் , மா விலை குறைக்கப்படாமல் பாண் விலையை குறைக்க முடியாது என்றும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சர் ஹரிசன் தெரிவிக்கையில்,

எமக்கு அறிவிக்காமலேயே பேக்கரி உரிமையாளர்கள் பாண் விலையை அதிகரித்துள்ளனர். டொலரின் பெருமதி அதிகரித்துச் சென்றமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் தாம் பாண் விலையை அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர்.

எவ்வாறிருப்பினும் அவர்களது பிரச்சினைகளை எம்மிடம் அவர்கள் நேரடியாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்பட்டால் எம்மால் அதற்கான நடவடிகக்கைகளை முன்னெடுக்க முடியும்.

பேக்கரி உற்பத்திகளில் விலையை அதிகரிக்க வேண்டுமானால் அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட ரீதியான நாடவடிக்கைகள் இருக்கின்றன. முதலில் அவர்கள் வாழ்க்கை செலவு குழுவுக்கு இது குறித்து அறியப்படுத்த வேண்டும்.

பின்னர் அது தொடர்பான யோசனையை நாம் அமைச்சரவையில் சமர்பித்து , அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டால் மாத்திரமே விலையை அதிகரிக்க முடியும்.

எனினும் அவர்கள் அவ்வாறு முறையாக எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. எமக்கு அறிவிக்காது இரு சந்தர்ப்பங்களில் பாண் விலையை அதிகரித்துள்ளனர்.

அவர்களது பிரச்சினைகளை எம்மிடம் முன்வைத்து , கலந்துரையாடி தீர்வொன்றை எடுக்கும் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ள பாண் விலையை கூறைக்குமாறு கோரியுள்ளோம் என்றார்.

SHARE