மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளைக்கு மடகொம்பரை மண்ணில் நினைவாலயம்

11

மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை யின் 105 வது பிறந்த தினமும் சிவி வாழ்ந்த வீட்டினை நினைவாலயமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வும் எதிர்வரும் 14-09-2019 சனிக்கிழமை காலை 9:30 மணி முதல் பகல் 12:45 மணிவரை மடகொம்பரை மண்ணில் நடைபெறவுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியவற்றின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் கௌரவ விருந்தினராக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர். எம்.உதயகுமார் கலந்து கொள்கிறார். அவருடன் முன்னாள் மத்மியமாகாண சபை உறுப்பினர்களான சோ.ஶ்ரீதரன், திருமதி. சரஸ்வதி சிவகுரு, எம்.ராம் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

பிரதம விருந்தினராக நுவரலியா மாவட்ட செயலாளர் ரோகன புஷ்பகுமாரவும் சிறப்பு அதிதிகளாக நுவரலியா மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர்கள், அனைத்து கல்வி வலயங்களினதும் தமிழ் பிரிவு கல்வி பணிப்பாளர்கள், எல்பிட்டிய பிளாண்டேசன் பொது முகாமையாளர உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

காலை சிவி நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவதோடு, சிவி வாழ்ந்த வீடு நினைவாலயமாக மாற்றப்பட்டு அதன் திறப்பும் பொறுப்பும் மடகொம்பரை சுவேந்திரபுரம் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினரிடம் ஒப்படைக்கப்படும். அதனைத் தொடர்ந்து மடகொம்பரை கலாசார மண்டபத்தில் இடம்பெறும் நினைவுப்பேருரையை மலையகம்: ஒரு புறநிலைப் பார்வை எனும் தலைப்பில் கவிஞரும் ஆய்வாளருமான சிராஜ் மஷ்ஷூர் ( தவிசாளர்- நல்லாட்சிக்கான தேசிய முன்னணி – முன்னாள் அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினர்) நிகழ்த்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து நினைவுரைகளை “ சிவியின் இலக்கிய பணிகள்” எனும் தலைப்பில் சாகித்திய ரத்ன தெளிவத்தை ஜோசப் , “சி.வியின் சமூகவியல்” பார்வை எனும் தலைப்பில் கலாநிதி ந.ரவீந்திரன், “சி.வியின் பத்மிரிகை உலகம்” எனும் தலைப்பில் எழுத்தாளர். லை.முருகபூபதி ( அவுஸ்திரேலியா), “சிவி எனும் அரசியல் தொழில் சங்க ஆளுமை” எனும் தலைப்பில் எழுத்தாளரும், அரசியல் தொழிற்சங்க ஆளுமையுமான கலாபூஷணம் மு.சிவலிங்கம் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.கௌரவிப்பு நிகழ்வுகளுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதி செயலாளர் ஜே.எம்.செபஸ்தியன் தலைமை தாங்குவார்.

நிகழ்ச்சி ஒழுங்கமைப்புகளை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் க.நகுலேஸ்வரன் மேற்கொள்ள இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர். எஸ்.பிலிப், தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

SHARE