இலங்கை அணிக்கு ஆபத்து ஏற்படலாம்

8

இலங்கை அணிக்கு பாக்கிஸ்தானில் ஆபத்து ஏற்படலாம் என்பது குறித்த எந்த தகவலோ புலனாய்வு தகவலோ தங்களிற்கு கிடைக்கவில்லை என பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கை அணிக்கு ஆபத்து ஏற்படலாம் என கிடைத்த தகவலை தொடர்ந்து  பாக்கிஸ்தானில் காணப்படும் பாதுகாப்பு நிலை குறித்து மறு ஆய்வை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக  இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அறிவித்துள்ளதை தொடர்ந்தே பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இதனை தெரிவித்துள்ளது.

நாங்கள் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அறிக்கையை பார்த்துள்ளோம் என குறிப்பிட்டுள்ள பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இலங்கை அணியின் பாதுகாப்பு குறித்து எங்களிற்கு எந்த தகவலோ புலனாய்வு தகவலோ கிடைக்கவில்லை எனகுறிப்பிட்டுள்ளது.

இலங்கை அணிக்கு முழுமையான பாதுகாப்பினை வழங்குவது குறித்த தனது அர்ப்பணிப்பினை மீள வெளியிட்டுள்ள பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இது குறித்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கை அணிக்கு எதிராக பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை தொடர்ந்து பாக்கிஸ்தானில் நிலவுகின்ற பாதுகாப்பு நிலையை மீண்டும் ஆராயுமாறு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரதமர் அலுவலகத்தின் மூலம் கிடைத்துள்ள தகவலை தொடர்ந்தே இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கை அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என மிகவும் நம்பகதன்மை வாய்ந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக  பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக  இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

SHARE