லேண்டருக்கு மின்சாரம் கிடைக்கும் வாய்ப்பு

13

லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விக்ரம் லேண்டரை ஓர்பீட்டர் கண்டுபிடித்தாலும் இதுவரை எந்த தகவலும் லேண்டரில் இருந்து கிடைக்கவில்லை எனவும் இஸ்ரோ கவலை வெளியிட்டுள்ளது.

மேலும் நிலவின் மேற்பரப்பில் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள விக்ரம் லேண்டரை, துல்லியமாக படம் பிடிக்கும் முயற்சியாக, நிலவின் சுற்று வட்டப்பாதையில் 100 கி.மீட்டர் தொலைவில் சுற்றி வரும் ஓர்பீட்டரின் தொலைவை 50 கி.மீட்டராக குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நிலவில், லேண்டரின் ஆயுள்காலம் 14 பூமி நாட்கள்தான். எனவே, லேண்டர் தற்போது விழுந்து கிடக்கும் நிலவின் தென்துருவ பகுதியில் 14 நாட்கள்தான் சூரிய ஒளிப்படும்.

லேண்டரிலுள்ள சூரிய ஒளி தகடுகளின் மூலமே அதற்கு தேவையான மின்சாரம் கிடைக்கும். ஏற்கனவே 3 நாட்கள் முடிந்து விட்டன. இன்னும் 11 நாட்கள்தான் அந்த பகுதியில் சூரிய ஒளிப்படும்.

ஒருவேளை லேண்டர் நொறுங்காமல் இருந்து அதிலுள்ள சூரிய ஒளி தகடுகள் செயற்படும் நிலையில் இருந்தால், இன்னும் 11நாட்களுக்கு லேண்டருக்கு மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆகையாலேயே லேண்டருடன் தொடர்பினை ஏற்படுத்த மிக விரைவான நடவடிக்கைகளை இஸ்ரோ தற்போது முன்னெடுத்து வருகின்றது.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

கடந்த மாதம் 20ஆம் திகதி ‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.

இதையடுத்து கடந்த 2ஆம் திகதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

பின்னர் இரண்டு முறை உந்து விசையைப் பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியது.

இதன்போது சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கிய சந்தர்ப்பத்தில் அதிலிருந்து சமிக்ஞை எதுவும் கிடைக்காத நிலையில், நிலவிலிருந்து சரியாக 2.1 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தபோது லேண்டர் தரைக்கட்டுப்பாட்டுத் தளத்துடனான தொடர்பிலிருந்து விலகியது.

லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வந்த நிலையிலேயே லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலிருந்து  எந்ததொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

இதனால் அதனுடன் தொடர்பினை ஏற்படுத்த இஸ்ரோ தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE