கணவரின் ஓய்வு குறித்த தகவல்கள் பொய்யானவை

13

எனது கணவர் ஓய்வு பெறுவதாக வெளியான தகவல்கள் வதந்தி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனியின் மனவைி  தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அப் போதைய அணித் தலைவராகவிருந்த தோனியுடன் இணைந்து விளையாடிய படத்தை டுவிட்டரில் பதிவேற்றிருந்தார்.

அத்துடன் அந்த பதிவில், “இந்த ஆட்டத்தை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. சிறப்பு வாய்ந்த இரவு. இந்த மனிதர் (தோனி), என்னை உடற்தகுதி சோதனையில் ஓடுவது போன்று ஓட்டம் எடுக்க ஓடவைத்தார்” என கூறியிருந்தார்.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 51 பந்துகளில் 82 ஓட்டங்களையும், தோனி 18 ஓட்டங்களையும் சேர்த்து இறுதிவரை  ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிபெற வைத்திருந்தனர்.

இந்த கூட்டணி 67 ஓட்டங்களை சேர்த்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தது.

தோனியை பாராட்டும் வகையில் விராட்கோலி வெளியிட்ட இந்த பதிவானது, அவரது எதிர்கால கிரிக்கெட்டுடன் எந்தவித தொடர்பையும் இணைக்காமலேயே இருந்தது. விராட் கோலியின் பதிவை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே சமூகவலைதள பக்கங்களில் தோனி ஓய்வு பெறுகிறார், இன்று (நேற்று) மாலை அறிவிக்கிறார் என ஊகங்கள் உலாவரத் தொடங்கியது.

இதற்கிடையே தென்னாப்பிரக்க டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் தேர்வு முடிந்ததும் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் இந்த டுவிட்டர் பதிவு குறித்து தொரிவிக்கையில்,

எங்கிருந்துதான் இத்தகைய வதந்திகள் தொடங்குகிறதோ என்று தெரியவில்லை. நிச்சயம் அது உண்மையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று பதிலளித்தார்.

இதற்கிடையே தோனியின் மனைவி சாக் ஷி, தோனி ஓய்வு பெறுவதாக வெளியான தகவல்கள் வதந்தி என தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

38 வயதான தோனி தற்போது அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வருகிறார். இராணுவத்தில் சேவை செய்வதற்காக சுமார் 2 மாத காலங்கள் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஒதுங்கியிருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற குறுகிய வடிவிலான தொடர் மற்றும் தற்போது நடைபெற உள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரிலும் தோனி பங்கேற்கவில்லை என்பதும் குறுப்பிடத்தக்கது.

SHARE