பூமியை காக்கும் ஓசோன் படலம்

16
china ozonசூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களில் இருந்து பூமியை காக்கும் ஓசோன் படலம் கரியமில வாயுவால் பெருமளவு பாதிப்புக்குள்ளாகிறது. வளிமண்டலத்தில் பரவியுள்ள இந்த அடுக்கு ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. பூமியிலிருந்து வெளியேறும் ட்ரைகுளோரோஃப்ளோரோ மீத்தேன் (trichlorofluoromethane) அல்லது  CFC-11 வாயு அதிகமாக ஓசோன் அடுக்கை பாதிப்புக்குள்ளாக்குவது தெரியவரவே உலக நாடுகள் இதனை தடை செய்ய ஒன்றுகூடின. அப்படி உருவாக்கப்பட்டதுதான் மாண்டீரியல் ஒப்பந்தம். 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி CFC-11 வாயு பயன்படுத்தப்படுவதை தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.
ozon hole

குளிர்சாதனப்பெட்டி மற்றும் நுரை தேவைப்படும் பொருட்களில் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாண்டீரியல் ஒப்பந்தத்தின் மூலம் இம்மாதிரியான தொழிற்சாலைகளை மூட அந்தந்த நாடுகளுக்கு ஐ.நா அழுத்தம் கொடுத்துவந்தது. அதைத்தான் தற்போது சீனா மீறியிருக்கிறது.

ஒப்பந்தம் போடப்பட்ட பின்பு வளிமண்டலத்தில் CFC-11 வாயுவின் அளவு கணிசமான அளவு குறைந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக CFC-11 அளவு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது கிழக்காசியாவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் தற்போது அது சீனாவில் இருந்துதான் வெளியேறி இருப்பதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்திருக்கின்றன.

நேச்சர் அறிவியல் இதழில் வளிமண்டத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மோசமான மாற்றத்திற்கு காரணம் கிழக்கு சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகள் தான் என ஆதாரத்தோடு குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு மட்டும் இந்தப் பகுதியில் இருந்து ஒவ்வொரு வருடமும் 7000 டன்களுக்கு மேல் CFC-11 வாயு வளிமண்டலத்தில் கலந்திருக்கிறது. விலை குறைவு என்பதால் வீட்டில் இன்சுலேஷன் செய்வதற்கும், குளிர்பதன சாதனங்களில் பயன்படுத்தப்படும் நுரைப் பொருள்களை உருவாக்கவும் CFC-11 வாயுவை அந்தத் தொழிற்சாலைகள் பயன்படுத்தியிருக்கின்றன.

சீனாவின் இந்த செயலுக்கு உலகம் முழுவதிலுமிருந்து எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கியிருக்கின்றன. தனிப்பட்ட பொருளாதார ஆதாயத்திற்காக சீனா இயற்கை மீது மிகப்பெரும் தாக்குதலை தொடுத்துள்ளது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

SHARE