எங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக மதத்தையும் இனத்தையும் ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம்

48

தோல்வியுள்ள அரசியல் நிகழ்ச்சி நிரலை மூடி மறைப்பதற்கான ஓர் ஆயுதமாக இன்று இனவாதமும், மதவாதமும் மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற மகாசங்கத்தினருடனான நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.

பெரும்பாலான அரசியல்வாதிகள் எமது தார்மீக உரிமைகளை தமது அரசியல் மேடைகளில் மேற்கொள்ளும் போராட்டமாக ஆக்கிக் கொண்டுள்ளனர். இந்த அடிப்படையில் எமது நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது.

நாட்டின் ஆட்சியாளர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தான் எமது தோல்விகளுக்குக் காரணம். இந்த ஆட்சியாளர்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி விட்டோம், ஜனநாயகத்தை நிலைநாட்டி சுதந்திரத்தை உறுதிப்படுத்தி விட்டோம், நாட்டை அபிவிருத்தியடையச் செய்துள்ளோம் என கலந்துரையாட முடியாதுள்ளது.

இதனாலேயே, அயோக்கியர்களின் கடைசி அடைக்களம் இனவாதமும், மதவாதமும் என கூறப்படுகின்றது. இதனையே நாம் நாட்டு அரசியலில் காண்கின்றோம்.

எங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக மதத்தையும் இனத்தையும் ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்று மகாசங்கத்தினரின் முன்னாள் நாங்கள் உறுதியளிக்கிறோம் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

SHARE