சிறுகதை – ‘விழுதுகள்’

200

(எழுத்தாளர் புயல் ஸ்ரீகந்தநேசன்)

காயத்திரி மகப்பேற்று விடுதியில் அனுமதி பெற்று பதினைந்து நாட்கள் கழிந்துவிட்டன. வைத்தியர் இன்று பிரசவம் நாளை பிரசவம் – தின மும் ஒவ்வொரு காலையும் மனப்பாடம் செய்வார். அந்த வார்த்தைகள் மட்டுமே அவளுக்கு மகிழ்ச்சியை அள்;ளி வீசின. பாக்கியம் தினமும் அங்கு சென்று, மகளுக்கு ஆறுதல் மொழி மொழிவாள்.

காயத்திரிக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் உருண்டோடின. வேலையின் நிமித்தம் வவுனியா பிரதேசத்திற்குத் தனிக்குடித்தனம் சென்றன, அந்த பறவைகள்.

முப்பத்து மூன்று வருடங்களாக அன்னையின் அரவணைப்பில் வாழ்ந்த அவளுக்கு உலகில் நடமாடும் தெய்வமாகவும் புனித வாசகமாக தாயின் வார்த்தையும் இருந்ததே ஒழிய இந்த உலகில் எதுவும் பெரிய விடயமாக தோன்றவில்லை. தாயும் மகளும் பரஸ்பரம் அதிக அன்பு, பாசம் கொண்டு வாழ்ந்தமையால், காயத்திரிக்கும் கணவனுக்கும் இடைவெளி அதிகரித்தது. இதை தாயும் சேயும் நன்கு உணர்ந்தாலும் அவர்களின் அன்பும் பாசமும் கண்களை மறைத்தன. மூன்று பெண் பிள்ளைகளை இந்த உலகத்தில் விருட்சத்தின் விழுதுகளாக படர விட்டுவிட்டு ஐம்பது வயதில் விதவைக்கோலம் பூண்டாள், காயத்திரியின் தாய் பாக்கியம். அன்று தொடங்கி தனது வாழ்வைக் குழந்தைகளுக்காக அர்ப்பணிப்புச் செய்தாள். ஆண் துணை இல்லாத குடும்பத்தில் பாக்கியம் தனது பெண் குழந்தைகளுக்கு எந்த குறையுமில்லாமல் கண்ணியம், கட்டுப்பாடு, கடமை தவ றாமல் வளர்த்து கல்வி, செல்வம், வீரம் – முப்பொருளுக்கு முத்தேவிகளாக உள்ள10ரிலும் வெளியூரிலும் வலம் வர வைத்தாள்.

பாக்கியம் திருமணம் நிறை வேறிய நாளிலிருந்து கணவனது வேண்டுகோளுக்கு ஏற்ப தாதியர் சேவைக்குத் தற்காலிகமாக ஒரு வருடத்திற்கு ஓய்வு கொடுத்தபோதும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து குடும்ப பொருளாதாரத்தில் நெருக்கடி நெருங்கியமையால், மீண்டும் கணவ னது வேண்டுகோளுக்கு ஏற்ப அந்த ஓய்வு நொருங்கியது. தன்னுடைய கணவன் மீது பற்றும் பாசமும் கொண்டிருந்தாலும் அவர்களின் தொழில் தொடர்ச்சியாக ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு பாதை சமைக்கவில்லை. அவர் தூரப் பிரதேசத்தில் தொழில் புரிந்தமையால், மது அரக்கன் மயக்கி மாயம் செய்தான்.

மூத்தவள் வினோதாவிற்கும் நடுப்பட்டவள் வினிதாவிற்கும் தாயின் விருப்பத்துடன் திருமணமாகி நோர்வேயில் வாழ்ந்தாலும், ஒரு நாழிகை மகள்மாருடன் தொலைபேசி யில் உரையாடவில்லை என்றால், அன்றைய நிசியில் நட்சத்திரமாக போராடி விடிவெள்ளியாகி ஒளி மங்கி வாடி வதங்கியிருப்பாள். மகள்மாரும் நட்சத்திரத்தை எரி நட்சத்திரமாக விழுவதற்கு விடவில்லை.

காயத்திரியுடன் இணைந்து வாழ்ந்த காலந்தான் பாக்கியத்தின் வாழ்நாளில் அதிகம். தாய் தாதியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றாலும் பிள்ளைகளுக்கான வாழ்க்கை பாதையைச் செதுக்கும் சிற்பியாக சேவை குளத்தில் நீந்திய வண்ணம் உள்ளாள். காயத்திரி முப்பத்தி மூன்று வயது முதிர் கன்னி பருவத்தை அடைந்த போதுதான், அவளுக்கு வவுனியா மாவட்டத்தில் ஆசி ரிய நியமனம் கிடைத்தது. 2008 ஆம் ஆண்டில் உள்ள10ர் மோதல் ஆரம்பம், வளர்ச்சி படிகளைத் தாண்டிய நிலையில் உச்சகட்டத்தைத் தொட்டிருந்தது. இது மக்களின் வாழ்க்கையில் பல அசௌகரியங்களை உண்டு பண்ணின. வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான தரை வழி போக்குவரத்துத் தடைப்பட்டு, கடல் வழியும் வான் வழியுமே போக்குவரத்து நடைபெற்றது. பாக்கியம் தனது மகளை வெளிமாவட்டத்திற்கு வேலைக்கு அனுப்புவதற்கு ஆரம்பத்தில் விருப்பம் இல்லாத போதும், மகளின் எதிர்கால வாழ்விலும் தான் மரணித்த பின்னரும் அவள் யாருக்கும் அடிமையில்லாத புதுமைப்பெண்ணாக வையகத்தில் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக பொய்கை விழிகளில் நீர் நிரம்பி வழிய, ஏக்கவுணர்வுடன் விடைகொடுத்தாள்.

காயத்திரி ஆசிரிய நியமனம் கிடைத்த இடத்தில் கேசவனின் தொடர்பு அரும்பாக அரும்பி, நட்பு மொட்டாக முகிழ்ந்து, காதல் பூவாக பூத்து, உறவு பிஞ்சாக படர்ந்து, இரு வீட்டார் பேச்சு வார்த்தை காயாக முதிர்ந்து, திருமணம் கனியாக கனிந்து, இரண்டு சேய்கள் வித்துக்கள் என்னும் விழுதுகளாக பூமியைப் பற்றினர். சேய்கள் விழுதுக ளாக படர்வதற்கு இங்கு பெண்மையும் ஆண்மையும் தாய்மையும் ஏதோவொரு வகையில் வெற்றி கண்டுள்ளன.

வட இலங்கையில் 2009களின் இறுதியில் உள்நாட்டு ஆயுத யுத்தம் தணிந்து முடிந்தது. யுத்த வடுக்களிலிருந்து மீண்டு வரும் காலப்பகுதியில் பாக்கியம் தன்னுடைய வாழ்வில் மூன்றாவது விபத்தைச் சந்திக்கின்றாள். அந்த விபத்தே அவளை மீள முடியாத நோயாளி யாக்கியதுடன், இறுதி விபத்தும் அதுவே.
அன்புத் தாயாரின் வேண்டு கோளுக்கேற்ப, 1967 ஆம் ஆண்டு சிவலிங்கத்தை வாழ்க்கை துணைவராக இணைத்துக்கொண்டு சில காலங்கள் வாழ்கின்ற போது இரண்டாவதாக பிறந்த ஆண் சிசு மண்ணைத் தொட்டாலும் உடல் ஆரோக்கியம் இன்மையால் அந்த மொட்டு முப்பத்தொரு நாட்களில் மலரா மல் கருகிவிட்டது. பாக்கியத்திற்கு இது முதலாவது விபத்து.

முதலாவது விபத்து நடந்து முடிந்த போதும் தம்பதியினர் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் இருக்கவில்லை என்று கூற முடியாது. எவ்வளவுதான் மனிதனுடைய வாழ்வில் இன்னல் நடந்தாலும் மரபை எதிர்த்து வாழ்ந்தாலும் இயற்கையை எதிர்த்து வாழ்வதற்கு பெண்ணிற்கு பெண்மையும் தாய்மையும், ஆணிற்கு ஆண்மையும் ஆளுமையும் இடம் கொடுக்காது. இயற்கையை எதிர்த்து சோகத்தில் இந்த தம்பதியினர் தங்களின் வாழ்வை வாழ்ந்திருந்தால், அஜந்தனுக்குப் பிறகு வினிதாவும் காயத்திரியும் பூவுலகில் அவதரித்திருக்கமாட்டார்கள். பெண்மை வாழ்வில் திருப்தி பெறவில்லை ஆண்மை வாழ்வில் திருப்தி பெறவில்லை என்றால், வாழ்க்கை விருட்சத்தில் அடுத்த சந்ததி விழுதுகள் நிலத்தில் படர்ந்து தனது பரம்பரையைச் சுமப்பது கேள்விக்குறியாகவே இருக்கும். பாக்கியம் குடும்ப வாழ்வில் சரியான மைற்கல் இட்டமையால்தான், மூன்று பிள்ளைகளின் மூன்று பேரப் பிள்ளைகளைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பமும் பிறப்பின் பயனை எட்டக் கூடிய நிலையும் கைகூடின.

முதலாவது விபத்திலிருந்து மீண்டு வரும் வேளையில் இரண்டாவது விபத்து சில வருடங்களில் அவளுக்குத் திட்டமிட்டு வந்ததைப் போல நடந்தது. கணவர் நோய் வாய்ப்பட்டு படுக்கையோடு போராடியபோது, பாக்கியம் யாழ்ப்பாணத்திலிருந்து தனியாக கொழும்புக்குச் சென்று, அவரைப் பராமரித்தபோதிலும் அவளால் அவரது உயிரை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. ஆண் துணையின்றி கணவனின் பூதவுடலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டுவர அவள் பட்ட கஷ்ட துன்பங்களும் சொல்லிலடங்காதவை. இலங்கையில் 1995களில் உள்நாட்டுப் போர் உக்கிரம் பெற்றிருந்தமையால், இது மேலும் பாக்கியத்திற்குச் சங்கட நிலையை உண்டு பண்ணியது. ஆண் பிள்ளைச் செல்வம் இல்லை என்ற குறை யைக் கணவர் நீக்கியபோதும் அவர் இறந்ததும் முதல் விபத்தின் வடுக்கள் ஆழ் மனதிலிருந்து வெளிவர, இரண்டு விபத்துக்களும் வாழ்வில் பொன் விழா காணவேண்டிய பூவை வாட்டின.

காயத்திரி முதற் தடவையாக கருவுற்றாள். இக் காலத்தில் காயத்திரிக்கும் கேசவனுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து பெரும் சண்டையாக மாறி மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் இடையில் நிரந்தர பிளவை உண்டு பண்ணியது. காயத்திரி எந்த விடயத்தைத் தொட்டாலும் தன்னுடைய தாயைச் சம்பந்தபடுத்தாமல் விடமாட்டாள். அதைப் போல தாய் பாக்கியமும் எந்த விடயத்தைத் தொட்டாலும் தன்னுடைய மகளைச் சம்பந்தபடுத்தாமல் விடமாட்டாள். சோஷலிச போக்கு உடைய கேசவனின் மன நிலையில் கணவன் – மனைவி உறவும் மாமி – மருமகள் உறவும் மச்சான் – மச்சான் உறவும் மச்சாள் – மச்சான் உறவும் திருமணமாகி ஒரு வருடத்திற்கு இனித்தாலும் சிறுக சிறுக இந்த உறவுக ளில் விரிசல் விழுந்தது. கணவன் – மனைவி, மாமி – மருமகன் உறவுக ளில் ஒன்று மாறி ஒன்று தடம் புரள ஆரம்பித்தபோது, வைத்திய சோதனை சொன்னது, ‘காயத்திரி அம்மாவாக போகி றாள்’ – இதனால், தடம் புரண்ட உறவுகள் தற்காலிகமாக நிம்மதியடைந்தன. கேசவனின் மது பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. திருமணம் முடித்த ஆரம்பத்தில் மாமியை அம்மா என்றே அழைத்து வந்த கேசவன், கோயில் குளம், வைத்தியசாலை, கொண்டாட்ட மரண நிகழ்வுகள் – பல்வேறு இடங்களுக்கு மாமியை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றான். பாக்கியத்திற்கு கண் சத்திர சிகிச்சை செய்த போது கேசவனே, அவளது கண்ணுக்கு மருந்துவிட்டு பராமரித்தான். இப்படியாக ஆசையில்லாத அன்பு கொண்ட உறவுக ளில் விரிசல் விழுந்தது ஏன்?

பாக்கியம், மகள் வாழ்வில் கொண்ட பயத்தாலும் கேசவனின் இடைவிடாத குடியாலும் மனமுடைந்தாள். தாய்மை உற்றிருந்த மகளை எண்ணி பாக்கியத்தின் தாய்மை குணம் தவித்தது. மனிதனுடைய வாழ்வில் திருமணம் நடப்பதும் முதல் இரவு நடப்பதும் ஒரு சம்பிரதாய சம்பவமே தவிர கட்டாயம் இல்லை. கேசவன் நன்கு உணர்ந்தவன். காதல், ஆசை, அன்பு, பற்று, பாசம், மிருகத்தனம், உணர்ச்சி, அறிவு என பல குணங்கள் மனிதருக்குள் இருந்தாலும் அவை ஒவ்வொருவருடைய காம இச்சையைப் பொறுத்து வேறுபடும், மாறு படும், தடுமாறும், கொந்தளிக்கும், சூடுகொள்ளும். ஆண் இயற்கையான காமமாகிய பாலியல் உறவில் திருப்தி யில்லையாயின் வேறு பல வழிகளை நாடுகின்றான், அமைக்கின்றான். இதில் மதுவும் ஒரு வழி. மதுவை அளவோடு பாவித்தவன் குடும்ப வாழ்வில் மனைவி யோடு பயணிக்கின்றான், அளவுக்கு அதிகமாக பாவித்தவன் பல பெண்களின் வாழ்வை சீரழிக்கின்றான், தானும் அழிகின்றான். கேசவன் இவற்றில் இருந்து மாறுபட்டவன். எல்லாவற்றிலும் திருப்தியைக் காண எண்ணுபவன். தாம்பத்திய உறவில் திருப்தியில்லை. அவனது வாழ்வில் தடுமாற்றம். மூவரி னதும் வாதம் அவர் அவர் பார்வைகளில் சரியே.

என்னதான் பெண்மையும் தாய்மையும் உலகத்தில் மதித்துப் போற்றப்பட்டாலும் அது தனது வயதுக்குரிய செயற்பாட்டை சரியாக செய்யாவிட்டால், தனி நபரிலும் குடும்பத்திலும் நாட்டிலும் உலகத்திலும் சிக்கலை உண்டு பண்ணுவதுடன், அவர்களின் தாம்பத்திய வாழ்வும் தோல்வியே என்பதை இக் கதையில் வரும் குடும்பங்கள் உணர்த்தியுள்ளன. காயத்திரிக்கு மூன்று மாதத்திற்குள் கருச்சிதைவு ஏற்பட்டமையால், தாம்பத்தியத்தில் திருப்தி இல்லாது தடுமாற்றத்துடன் அலைந்த கேசவனின் உறவு தேவைப்படுகின்றது ஒரு வம்ச விழுதுக்கு மட்டுமே.

பேதை, பெதுமை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரி ளம் பெண் – பெண்களின் ஏழு பருவங்களில் தெரிவை பருவத்துக்குள் பெண்கள் திருமணம் செய்தால்தான், தாம்பத்திய உறவில் திருப்தி அடையவும், ஏற்படுத்தவும் முடியும். காயத்திரி கணவ னின் மனநிலையைப் புறந்தள்ளிவிட்டு சந்ததியின் விழுது ஒன்றைச் சமூகத்திற்குப் பயந்து உற்பவிப்பது மட்டுமே அவளின் குறிக்கோள்.

இது நவீன பெண்ணியத்தின் தலையாய பண்பு. காயத்திரி இதற்கு விதிவிலக்கல்ல. பசியோடு இருப்பவனுக்கு சில மாதங்கள் நல்ல உணவு. காயத்திரி மீண்டும் கருவுற்றாள். கணவன் – மனைவி, மாமி – மருமகன் உறவு மீண்டும் தெறித்து தெறித்து பொருந்தியது.

பாக்கியத்திற்கு, குடிகார மரும கனை எண்ணி மகள் மீது பரிவும் இரக்கமும் ஏற்பட்டன. காயத்திரி, தூர பிரதேசத்திற்கு பேரூந்தில் அதிகாலை ஐந்து மணிக்கு வேலைக்குச் செல்வதும் மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புவதும் சில வருடங்கள் வழக்கம். பாக்கியம் 1944 ஆம் ஆண்டில் பிறந்து பன்னிரண்டு வயதில் தந்தையை இழந்தாலும் தாய் பூரணத்தின் பராமரிப்பில் வளர்ந்து உலக சவால்களை எதிர்கொள்ளும் சாணக்கியம் பெற்றிருந்தாள். ஆண்மையைப் பூரணமாக வெல்லும் பெண்கள் இவர்களின் பரம்பரையில் குறைவே. பாக்கியம் குழந்தையைச் சுமக்கும் தாயைப் பராமரிக்கும் சகல வித்தைகளையும் கற்றிருந்தாள். தனி மரமாக நின்று உணவு சமைத்து, காயத்திரியின் கடமைகளைச் செய்து, அவளைப் பாடசாலைக்கு அனுப்பி வைப்பாள். இங்கு தாய்மைக்கு இணையான பாசம் எதுவும் இல்லை என்பதையும் தாய்மையின் மேன்மையையும் காணலாம்.

தாய் பாக்கியமும் மகள் காயத்திரியும் 2014 ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தின் முற்பகுதியில் ஓர் இராப் பொழுதில் பத்து மணியளவில் படுக்கைக்கு வேண்டிய அடுக்குகளைச் செய்த வண்ணம் உள்ளனர். வெளிச் சூழலில் மழைத்துளிகள் மெது மெதுவாக தூறுகின்றன. அன்றைய இரவு வித்தி யாசமாக வீட்டு முற்றத்து மாமரத்தில் கோட்டான் அலறுகின்றது. அந்த சப்தத்தினால், பழுத்திருந்த மாங்கனிகள் நிலத்தில் விழ, மரத்தில் உள்ள வெளவால் கூட்டங்கள் எழுந்து பறக்கின்றன. ஓர் இரவும் இல்லாத அளவுக்கு அன்று இரவு கருகருவென கருமையாக இருந்தது. அரியாலை, இலந்தைக்குளம் வீதியில் சில ஐPவன்கள் இவற்றைப் பொருட்படுத்தாமல் நடமாடுகின்றன. பாக்கியம் பகல் முழுவதும் ஓடி ஓடி வீட்டு பணி களைச் செய்தமையால், கட்டிலில் சிறிது கண்ணயர்ந்தாள். சாமி அறை யின் சாளரங்களினூடாக சில்லென்று குளிர்க் காற்று வீசுகின்றது. முதிர்ந்த மேனியில் பட்டுத் திரும்பும் அந்த குளிர்க்காற்று பாக்கியத்திடம் என்னவோ சொல்ல நினைப்பதைப் போல சாளர கதவுகளை அடித்து மூடி திறக்கின்றது. தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே போராடிக்கொண்டிருந்த அவளின் விழிகள் மூன்று பெண்களுக்கு மணம் செய்து வைத்ததை எண்ணி நிம்மதி கொண்டாலும் மூன்றாவது மகளின் வாழ்க்கை குழப்பத்தைக் கொடுத்தது. ஏதோ அபாயம் நடக்கப் போவதைப் போல மழைத்தூறலில் நனைந்தவாறு வீட்டுக்காவல் ஆண் நாய் குரைக்கின்றது. பெட்டை நாய் குரைத்து குரைத்து இடையிடையே ஊளை விடுகின்றது. காயத்திரி மெதுவாக பட லையை உற்று நோக்கினாள். படலை யின் வெளிப்புறத்தில் ஓர் இளைஞன்.

‘அக்கா…அக்கா… உங்கட அண்ணன் றோட்டில விழுந்து ரெத்தத்தில கிடக்கிறாறு ஓடியாங்க’

காயத்திரி ஒரு கணம் திகைத்துப்போனாள். வயிற்றைத் தடவுகின்றாள். அவள், அப்படி நடந்திருக்காது என்ற நம்பிக்கையில் ‘தன்னுடைய கணவன் குடிகாரன்தான், அதற்காக வீதியில் விழுந்து கிடக்கும் அளவுக்கு பெரிய குடிகாரன் இல்லை’ மனம் எண்ணிய போதும் அந்த வார்த்தைகளை வெளியில் சொல்லவில்லை. சற்று சந்தேகம் வேதனை. இவளுக்குச் சந்ததி வேண்டும். அவனுக்கு இரண்டும் வேண்டும். இரண்டில் ஒன்று இல்லாததால் அவனுக்கு இந்நிலை. எப்படியும் இயற்கையை வெறுக்க முடியாது.

பாக்கியம் அறைக்குள் இருந்து செவிமடுத்துக்கொண்டே பதற்றத்துடன் வெளியில் வந்து,

‘வா… வா… தம்பி போவம். எங்க விழுந்து கிடக்கிறார். யாரும் பக்கத்தில இருக்காங்களா?’

மனம் பதைபதைக்க தள்ளாத வயதில் பாக்கியம், அந்த இளைஞனின் ‘சைக்கிளில்’ பயணிக்கின்றாள்.

‘பிரப்பங்குளம் அம்மன் ஆலயத்திற்குப் பக்கத்தில் யாரும் இல்லை’

காயத்திரி ஏதோவொரு பிடிப்பில் பின் தொடர்கின்றாள். வயிறு இடம் கொடுக்க மறுக்கின்றது.

முதல் நாள் குடித்த மதுவின் மயக்கம். தவறுதலாக ஒரு விபத்து. இரண்டு பெண்கள் காயம். ஐந்தாயிரம் ரூபாய் இழப்பீடு. அந்த விபத்தை சீர் செய்ய பொலிஸ் நண்பர்களுடன் ‘பாட்டி.’ கேசவன், தலைகீழ் வெறியில் சிஞ்சி அக்காவின் வீட்டைக்காட்ட, பொலிஸார் அவனை அங்கு பாதுகாப்பாக விட்டுச்சென்றனர். இவ்வாறு பல இளைஞர்கள்.

கபட குணம் இல்லாத கேசவன், சிஞ்சி அக்காவின் வீட்டைக்காட்டியதற்கு, தனது வீட்டுக்கு பயந்தோ, தடு மாற்றத்திலோ, வெறி முறியட்டும் என்றோ, பொழுதுப்போக்கிற்காகவோ, சிஞ்சி அக்கா அவன் மீது தாயைப் போல கடந்த மாதங்களில் பாசம் செலுத்தியதாலோ, திட்டமிட்ட சதியாலோ, மணம் முடித்த புதுசில் தம்பதிகளுக்கு வீட்டில் விருந்து கொடுத்ததாலோ, விருந்தில் சிஞ்சி அக்கா கேசவனின் கரங்களில் இரண்டாயிரம் ரூபாய் பணத்தை திணித்தமையாலோ, – என்ன என்னவோ கூறினாலும்? பொலிஸ் நண்பர்களை எதிர்த்து சிஞ்சி அக்காவின் வீட்டுக்குள் நுழைந்தமைக்கு ‘மதுவை மண்டி மதி மயங்கி ஏதோவொரு தடுமாற்றம்தான்’ காரணம். கனவுலகில் கானம் பாடும் காகம் தன்னைக் குயி லாக பாவம் பண்ணுவதைப் போல மது அருந்துபவனும் கனவுலகில் சுயமற்று ஓடும் இயந்திரம்’.

கேசவனின் தாய் அவனைப் பாராட்டுத் தாயாக, ஊட்டுத் தாயாக, முலைத் தாயாக, கைத் தாயாக, செவி லித் தாயாக பிறப்பிலிருந்து முப்பது வயது வரை கவனித்தாள். இந்த ஆளுமையுள்ள இளைஞனைச் சமூகம் சரியாக வழி நடத்தினால், இவனது தீர்க்கமான சிந்தனையால் எதிர்கால சமூகம் நல்வழி பெறும். இப்போது கேசவன் சரியான தலைமைத்துவமின்மையாலும் சரியான வழி நடத்தல் இன்மையாலும் சிஞ்சி அக்காவின் வீட்டில் நிதானம் இல்லாமல் மடா தண்ணியில் நீந்துகின்றான். அவன் திருமணமாகி இரண்டு வருடங்களில் மனைவியின் உறவினர்களின் கபட மனநிலையை அறிந்து கொள்வதற்கு வளரவும் இல்லை. வளர்க்கப்படவும் இல்லை.

பல மனிதருடைய வாழ்வைப் பணந்தான் தீர்மானிக்கின்றது. பண்பற்ற மனிதரும் உண்டு. பொறாமை மனி தரும் வாழ்கின்றனர். உறவுகளு டன் பணத்திற்காக பகட்டுக்காக பழகு பவர்களும் சீவிக்கின்றனர். உறவுகளைப் பணத்திற்காக அந்தரிக்க விடுபவர்களும் வலம் வருகின்றனர். இவ்வாறு பல வடிவங்களைக் கொண்டது, சிஞ்சி அக்காவின் குடும்பம். தாயும் மகளும் பணத்திற்காகவும் பகட்டுக்காகவும் உறவுகளுக்கு முகமன் பாடிக்கொண்டு வாழ்பவர்கள். தாம்பத்திய உறவில் திருப்தி காணாத சிஞ்சி அக்கா தனது கணவனுக்குக் குடிகாரன் பட்டம் சூட்டி துரத்தி விட்டாள். அதற்கு சிஞ்சி அக்காவின் தாயும் உடன்பாடு. தன்னுடைய மகளுக்குச் சிசு இன்மையாலும் கணவ னுடன் இணைந்து வாழாமையும் ஊர் மத்தியில் தப்பாக கதைக்கப்பட்டமையால், ஆத்திரம் அடைந்திருந்த தாயும் மகளும் பாக்கி குடும்பத்திற்கு ஊர் மத்தியில் கெட்ட பெயர் உண்டு பண்ணவும் காயத்திரியின் கருவைச் சிதைக்கவும் மது போதையில் சென்ற கேசவனை பயன்படுத்தினர்.

அன்று இரவு சிஞ்சி அக்காவின் வீட்டுக்கு வந்திருந்த இரகசிய மனி தனுடன் இணைந்து அவர்களின் சதித் திட்டத்தை நிறைவேற்றினர். போதையில் உள்ள கேசவனுக்குப் போதைக்கு மேல் போதை ஏற்றி படலைக்கு வெளியில் அநா தரவாக நாய் போல துரத்திவிட்டனர். வெளிச்சம் இல்லாத ‘லேன்சர் பைக்’ நிதானம் இல்லாத கேசவனுடன் தடு மாறி தடுமாறி யு9 வீதியைக் கடந்து இலந்தைக்குளம் வீதியில் இறங்கி ‘கும்’ நிசிக்குள் மறைகின்றது. அணைந்த தெரு விளக்குகள் ஒளிர்கின்றன. ஓர் இளைஞன் ‘சைக்கிளில்’ ஓடுகின்றான.

இந்த குடும்பத்தில் பெண்மையும் தாய்மையும் விருட்சத்தின் விழுதை யும் விழுதுகளையும் விரும்பவில்லை. பெண்மை தாய்மை அடைந்தாலும் வாழ்வியலின் யதார்த்தத்தை உணரவில்லை என்றால், எந்த பயனும் இல்லை. தாய்மை அடையாத பெண்மையை இங்கு முதுமை அடைந்த பெண்மையும் தாய்மையும் உடையவள் முழுமையான சுய நலத்துடன் செயற்படுவதைக் காணலாம். சிஞ்சி அக்கா, தனது கணவனை வெறுத்தது பெண்ணியம் வேண்டியா, பெண்மை காமத்திலா, பணத்திற்காகவா, தாய்ப் பாசத்திற்காகவா – எதுவாக இருந்தாலும் இங்கு பெண்மையும தாய்மையும் தோற்றுவிட்டன. கரடுமுரடான பாதையா னாலும் பாக்கியம் குடும்பத்தில் வென்று விட்டன.

நவீன உலகத்தில் விதவித மான தொலைபேசிகள் வந்து பல விபத்துக்கள் நடந்தாலும் சில விபத்துக்கள் தடுக்கப்பட்டும் இருக்கின்றன. அந்த நிசியில் இரகசிய மனிதனுக்கும் ஊர்க் குருவிகளுக்கும் தொலைபேசியில் இலக்கங்களை அழுத்திய தாயும் மகளும் நெருங்கிய உறவு பாக்கி குடும்பத்திற்கு அழுத்தியிருந்தால், பெண்மையும் தாய்மையும் வெற்றி பெற்றிருப்பதுடன், கேசவனின் விபத்தும் தடுக்கப்பட்டிருக்கும்.

அந்த இளைஞனது ‘சைக்கிளில்’ இருந்து பாக்கியம் திடீரென இறங்கினாள். மருமகன் தனிமையில் உயிருக்குப் போராடுவதையும் வாயிலும் மூக்கிலும் இரத்தம் குபுகுபு என வெளியேறுவதை யும் பார்த்து மயங்கும் நிலை வந்தாலும் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, யாழ் – வைத்தியசாலை ‘அம்புலன்ஸை’ வரவழைத்து தனி மரமாக ஏற்றிச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்தாள். இந்த விபத்து பாக்கியத்தை மூன்றாவது விபத்தாக காவு கொண்டு பயம், கோபம், கவலை உண்டு பண்ணி மீள முடியாத, அறிய முடியாத புற்றுநோய்க்கு உள்ளாகின்றாள்.

அதிகாலையில் செய்தி பரவுகின்றது:- ‘மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டிருந்தாலும் கேசவன் உயிர் தப்பிவிட்டான். ஒரு கையும் ஒரு காலும் இயங்காததுடன், பேசவும் முடியாது’ – . ‘ஐயோ! எனது மகள் விதவையாகவில்லை. மருமகனையும் என்னைப்போல ஒரு தாய்தானே பெற்றிருப்பாள். அவன் உயிர் தப்பியதே போதும்’ – பெருமூச்சு விட்டாள், பாக்கியம். இங்கு முதிர்ந்த பெண்மை – தாய்மை குடும்ப வாழ்வில் முழுமை பெற்றுவிட்டது, சாதித்துவிட்டது.

நண்பகல் பிரசவ அறைக்குள் அனுமதிக்கப்பட்ட காயத்திரிக்கு இயற்கையாக குழந்தை பிறக்க அவளது உடல் இடம் கொடுக்கவில்லை. மாலை ஐந்து மணிக்கு ‘சீசேரியன்’ மூலம் வெளியில் எடுக்கப்பட்டது. ஊழியர், காயத்திரியைத் தள்ளு வண்டியில் வெளி யில் கொண்டு வருகின்றனர். ஒரு தாதிப் பெண், குழந்தையைத் தூக்கி வந்து தாயி டம் காட்டுகின்றாள். ‘மகள் பாவம் தாங்க மாட்டாள். எனக்காக இவ்வளவு காலமும் தன்னை அர்ப்பணித்தவள். ஆண் பிள்ளை இல்லாத குறையைத் தீர்த்தவள். உறவுகளுக்காக உழைத்தவள். கோபக்காரிதான். இருந்தாலும் நல்லவள்’ – தாய்மை தனக்குள் முனங்க தாயினதும் மகளினதும் கண்ணீர்த்துளிகள் ஒன்றாக சிசுவின் மீது சிந்துகின்றன.

பாக்கியத்தை மூன்று விபத்துக்களும் படிப்படியாக கொன்றொழித்துவிட்டன. இன்னும் ஐந்து வருடங்களாவது வாழவேண்டியவள். 26-10-2017 இல் கடைசி மகளும் கடைசி மருமகனும் வைத்தியசாலையில் கட்டில் அருகில் கண்ணீர் மல்க நிற்க, உயிர் உடம்பை விட்டுப் பிரிந்தது. அவளது முகத்தில் பெண்மையையும் தாய்மையையும் வெற்றி கொண்ட திருப்தியும் ஆண்மையைத் முழுமையாக திருப்திப்படுத்த முடியாத ஏக்கமும் தெரிந்தன.

காயத்திரிக்கு இயற்கையை வெல்ல முடியாத நிலையில், விருட்சத்தின் இன்னுமொரு விழுதாக 07-10-2018 இல் காலைப் பொழுதில் ஆண் சிசு ஒன்று அவதரிக்கின்றது.

பாக்கியத்தின் மரணம் காயத்திரியின் மூலம் பெண்ணியமும் பெண்மையும் ஆண்மையை வெற்றி கொள்ள எத்தனித்ததன் விளைவுதான் ஆண் சிசு.

தாய்மை, மரணத்திலும் மகள் – மருமகனை இணைத்தது.

காயத்திரியின் தாய்மை திருப்தியடைந்தது. பெண்மை தொடர்ந்து ஆண்மையைத் திருப்திப்படுத்துமா, விபத்துக்களை உண்டு பண்ணுமா, விருட்சத்தின் விழுதுகளை இன்னும் இன்னும் படர விடுமா?
‘அம்மம்மா சாமிக்கிட்ட போயிட்டா நாளைக்கு வருவா’ நான்கு வயது பேத்தி தினமும் பாக்கியத்தின் படத்தைப் பார்த்து புலம்புவாள்.

நேற்று பெண்மைக்குத் திருப்தி, ஆண்மைக்கு அதிருப்தி, தாய்மைக்கு ஆரவாரம், சமூகத்திற்குக் கொண்டாட்டம், இளையோருக்கு அசதி, சிந்தனைக்குச் சிறை. இன்று பெண்மைக்கு வாழ்வு, ஆண்மைக்குச் சிதைவு, தாய்மைக்குப் பாராட்டு, சமூகத்திற்கு சுயநலம், இளை யோருக்கு மடமை, சிந்தனைக்குச் சிறகு. நாளை பெண்மைக்கு விடுதலை, ஆண்மைக்குச் சிந்தனை, தாய்க்குப் புகழ், சமூகத்திற்கு தலைமைத்துவம், இளையோருக்கு பாதை வகுத்தல், சிந்தனைக்குச் சுதந்திரம்.

முற்றும்.

 

SHARE