சிறுகதை: காகங்களும் மைனாக்களும்

187

(எழுத்தாளர் புயல் ஸ்ரீகந்தநேசன்)

‘…தம்பி! இரவு பத்து மணிக்கு பத்து பேர் இருக்கும். அரைகுறையான தமிழ் கதைத்துக்கொண்டு வந்து என்ர புருஷன வாளால வெட்டிப் போட்டாங்கள்…’

‘என்ன கந்தசாமியண்ணை இன்றைக்கு நேரம் பிந்தி வாறீங்கள். வாற வழியில ஏதும் பிரச்சினையா…’

‘ ஓமடா தம்பி. நெல்லியடியில இருந்து யாழ்ப்பாணம் வாறதென்றால் உயிர் போயிட்டு வந்திடுமடா. அதுவும் மோட்டார் சைக்கிளில வாரதுனா சரி மனிஷன் செத்தான்’
‘என்ன கந்தசாமியண்ணன் அப்படி பிரச்சினை?’

‘சுரேஷ் இந்த சமாதான ஒப்பந்தம் வந்து கொஞ்ச காலமாக நாட்டில அமைதியிருந்திச்சு. இப்ப எங்கோ ஒரு நாடான ஜெனிவாவில பேச்சு நடந்திச்சு. அதில அரசாங்கம் சில வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் அதை செயற்படுத்த தவறி விட்டதினால் தான் எங்கட நாட்டில் இப்படிப் பிரச்சினை…’

‘நானும் பேப்பரில பார்க்கிற னான். யாழ்ப்பாணத்தில அமைதி யில்லையாம் என்று அடிக்கடி செய்து வருகுது. நாங்கள் முதல் யாழ்ப்பாணம் வரும் போது அங்க அமைதி இருந்தது தான். அதுக்கிடையில அப்படி என்ன நடந்திச்சு?’

‘சுரேஷ் அது அப்ப. இது இப்ப. பால்குடி மறவாத பிள்ளைகளுடன் சேர்த்து தாய், தந்தை என்று எங்கள் தமிழ் இனத்தைக் கொன்று குவிக்கிறாங்கடா… சண்ட காலத் திலக் கூட இப்படி தமிழ் மக்கள் சாகவில்லை. இப்ப கொஞ்ச நாளா தமிழ் இனத்தை அழிக்கிறாங்க. அது எங்க போய் முடியுதோ தெரியாது.’

‘மற்றது மணியண்ணன் உவன் சுகந்தன் இஞ்ச வாறனு சொன்னான். எப்படி அவன்ட பயண அலுவலெல்லாம் சரி வந்திட்டா…’

‘அட உனக்கு அந்த விஷயம் தெரியாதா?’
‘என்ன விஷயம்’
‘பாவமடா அவன். நெல்லியடியில் கிரனேட் வெடிச்சிச்சு. அண்டைக்கு இவன் அவங்கட அம்மாவுக்கு மருந்து வாங்க பாமசிக்கு போகேக்க அவன் காற்சட்டை பொக்கற்றுக்குள மருந்து போத்தல் வைத்திருந்தான். இதைக் குண்டு என்று நினைத்து அவனைச் சுட்டுப் போட்டாங்கள் ஆமிக்காரர். பார் அவண்ட வாழ்க்கை அப்படியாக போச்சு. அடுத்த மாதந்தாண்டா அவனுக்கு கலியாணம் என்று கதைச்சாங்க…’
‘சீ…..சீ…..பாவம்’

‘சரி மணியண்ணன் நான் நாளைக்கு காசு போடுறன். அப்பாவையும், அம்மாவையும் தங்கச்சியையும் கவனமாக பாத்துக்கங்க.’
‘இஞ்ச சுரேஷ் உவள் வானிக்கு ஒரு சம்பந்தம் வந்திருக்கு. பொடியன் ழுஃடு வரை படிச்சிட்டு கதிரை பின்னல் வேலை செய்கிறான். ஆனா வாய்பேச மாட்டான்’

‘என்ன மணியண்ணன்’
‘வேறு என்னடா செய்றது. குறையில்லாத மாப்பிள்ளையை எப்படி அவளுக்குத் தேடுறது. வாறவங்க எல்லாம் அவளின்ட குறை யைக் கண்டதும் வேண்டாம் என்று போறாங்க.’
‘சரி பொருத்தமாக இருந்தா பாருங்க. எனக்கு இன்னும் பத்து நாளில விசா முடியுது. எப்படியும் நான் சிறிலங்காவுக்கு வந்திடுவன்’

‘ஏய் சுரேஷ் உன்ர அப்பா சொன்னாரு வரேக்க ஏதோ வெளிநாட்டு சாராயம் போன முறை வரேக்க கொண்டுவந்தாயாம் அதுவொன்று கொண்டு வரச் சொன்னார்’
‘சரி நான் கொண்டு வாறன்’
‘ சுரேஷ் வேற என்ன’
‘ஒன்றுமில்லை மணி யண்ணன். எல்லாம் நான் வந்து கதைப்பம்’
‘ சரி சுரேஷ்’

தனது தந்தை அழகாக வளர்த்து வைத்த வாழைத்தோட்டத்தில் பாலை வனத்தில் விடப்பட்ட ஆட்டுக் குட்டியைப் போல நடக்கின்றான். கடைசி காலத்தில் இவனின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பாரிச வாதம் வந்து நடக்க முடியாது. வானி பிறவியிலேயே இரண்டு கண் பார்வையையும் இழந்தவள். பக்கத்து வீட்டு மணியண்ணன் தான் இவர்களது குடும்பத்திற்கு உதவி செய்து வருகின்றார். சுரேஷ் லண்டனுக்குச் சென்று பத்து வருடங்களாகிவிட்டன.

‘பத்து நாளைக்கு முன்னம் வந்திருந்தா இவுங்களோட நானும் செத்து போயிருப்பன். ஏன் கடவுளே என்னை மட்டும் இப்படிச் சோதிக்கிற? நானும் மனிதன் தானே. ஏன் இவர்களுக்கு இப்படி நடந்தது. இதைக் கேட்க யாருமில்லையா…’ என்றவாறு அந்த வாழைத் தோட்டத்தில் பித்துப் பிடித்தவனைப் போல அழைக்கின்றான்.

அந்த நேரத்தில் இரண்டு காகங்கள் மைனா குஞ்சியொன்றை துரத்தித் துரத்திக் கொத்திக் கொண்டிருந்தன. அந்த குஞ்சுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் வாழைச் சருகுக்குள் அங்குமிங்கும் ஓடி ஒளித்தது. ஆனால் அந்த இரண்டு காகங்களும் விடுவதாக இல்லை. அந்தக் குஞ்சைக் கொத்தி கொத்தி காயத்தை ஏற்படுத்தி அரை உயிருடன் இருக்கும் போதே இறைச்சியை உண்டன. வலி தாங்க முடியாமல் ‘மை…ன….மை…னா…மை…..’ என்று அலறியது. இதைக்கேட்டதும் ஏனைய மைனாக் கூட்டங்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவது போல அந்த வாழைத் தோட்டத்தை நோக்கி பறந்து வந்து அந்த இரண்டு காகங்களையும் விரட்டி விரட்டி கொத்தின. தலையில் சிறிய காயம் பட்ட அந்த மைனாக் குஞ்சை அனைத்து மைனாக்களும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றன.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சுரேசுக்கு தமிழர்கள் இப்படி அழிவடைந்து போவதற்குக் காரணம் என்ன என்பதைப் புரிந்து கொண்டான். இந்த மைனா இனங்க ளைப் போல தமிழர்களாகிய அனை வரும் ஒன்றுபட்டால் எமக்கு இப்படி அழிவு ஏற்படாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டான்.
மணியண்ணனுடன் தொலை பேசியில் கதைத்து விட்டுச் சென்ற சுரேசுக்கு பின்னர் ‘டெலிபோன்’ எடுக்கக்கூட எவரும் இல்லை. சுரேஷின் தொலைபேசி இலக்கம் மணியண்ணன விட யாருக்கும் தெரி யாது. ‘டெலிபோன்’ எடுக்க அவரும் உயிருடன் இல்ல.
பத்து நாட்கள் கழிந்து லண்டனில் இருந்து நெல்லியடியில் வந்திறங்கினான். சுரேஷ் வீட்டின் படலை பூட்டிக் கிடக்கின்றது. இவன் லண்டனுக்குப் போகும் போது சிறிய குட்டி நாயாக இருந்த அந்த நாய் இவனைக் கண்டதும் வாலை ஆட்டிக் கொண்டு நின்றது. சுரேஷைக் கண்ட பக்கத்து வீட்டு ராசாத்தி அக்கா ஓடிவந்து,
‘தம்பி சுரேஷ் உங்கட அப்பா, அம்மா, தங்கச்சி, மணியண்ணன் எல்லோரையும் இரவு கதவைத் தட்டிக் கொலை செய்து போட்டாங்கள். எங்கட வீட்டையும் என்ர கணவர கொலை செய்து போட்டாங்கள்’

இராசாத்தி அக்கா படலையைத் திறந்து விட்டதும் சுரேஷ் வாங்கி வந்த பொருட்களை வீதியில் போட்டு விட்டு வீட்டைத் திறந்து வீட்டின் சுவர்களில் மாட்டப்பட்டிருந்த அவர்களின் படங்களைப் பார்க்கின்றான்.ஊர் மக்கள் எல்லோராலும் அந்த ஊரில் இறந்து போன எட்டுப் பேரி னதும் சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன. இதனால், சுரேஷ் இறந்து போனவர்களின் உடல்களைக் கூட பார்க்கவில்லை.தனியாகத் திரிந்தும் உணவின்றியும் ஒரு மாதத்திற்கு மேல் கழிந்தது. பக்கத்து வீட்டு ராசாத்தி அக்கா உணவு கொண்டு வந்து வைத்து விட்டுச் செல்வாள். அதையெல்லாம் அந்த நாயே தின்றது.

தனது தங்கையின் வெள்ளைப் பிரம்பை எடுத்துக்கொண்டு வாழைத் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான். இதைக் கண்ட ராசாத்தி அக்கா, ‘தம்பி ஏன் கண்ண மூடிக்கொண்டு இப்படி செய்றீங்க…’
‘இல்ல அக்கா தங்கச்சியை மறக்க முடியவில்லை’

‘சரி வாங்க சாப்பிடுங்க. இப்படி எத்தனை நாளைக்குத் தான் சாப்பாடு இல்லாம இருக்கப் போறீங்க’
‘சாப்பாடு கிடக்கட்டும் ராசாத்தி அக்கா. என்ன நடந்திச்சு. ஏன் இப்படி எல்லோரும் ஒரேடியா செத்தாங்க’

‘தம்பி இரவு பத்து மணிக்கு பத்து பேர் இருக்கும் அரைகுறையான தமிழ் கதைத்துக் கொண்டு வந்து என்ர புருஷன வாளால வெட்டிப் போட்டாங்கள். பிறகு உங்கட வீட்டுப் பக்கம் போனாங்கள். ஏதோ ஐயோ என்று உங்கட தங்கச்சி கத்தினா. சத்தம் மட்டுந்தான் கேட்டது. நான் யன்னலால வெளியில ஓடினதால என்ர உயிர விட்டுட்டு போட்டாங்க. ஊர் மக்கள் இரவு சத்தம் கேட்டதும் ஒருதரும் வெளியில் வரவில்லை. எங்கட ஊரில ஆயிரம் பேருக்கு மேலாக இருக்காங்க. அத் தனை பேரும் வந்திருந்தா அந்த பத்துப் பேரை யும் அடிச்சி கலைச்சிருக்கலாம். ஆனா என்ன செய்வது. எங்கட ஊர் ஒற்றுமையில்ல’.

அந்த நேரத்தில் மீண்டும் அந்த மைனாக்குஞ்சை இரண்டு காகங்கள் துரத்தித் துரத்திக் கொத்திக் கொண்டிருந்தன. மைனாக் கூட்டங்கள் ஒரு வெட்டுக் கிளிக்காக வேண்டி தமக்குள் முரண்பட்டுக் கொண்டு அது எனக்கு வேண்டும் என்று சண்டை போட்டு பிரிந்துவிட்டன. இதனைப் பார்த்துக் கொண்டிருந்த காகங்கள் அந்த மைனாக் குஞ்சை துரத்திக் கொத்தத் தொடங்கின. தாய் மைனா தனிமையாக நின்று ஒரு கொஞ்ச நேரம் தடுத்துப் பார்த்தது. அதனால் முடியவில்லை.

இறுதியில் அந்த மைனாக் குஞ்சியை இரண்டு காகங்களும் சேர்ந்து உண்டன. வெறும் சோகத்துடன் தாய் மைனா திரும்பிப் பார்த்துச் சென்றது.

‘அங்க பார்த்திங்களா ராசாத்தி அக்கா. இதே சம்பவம் இதற்கு முன் தலைகீழா நடந்தது. இப்ப இப்படி நடக்குது. இப்படிதான் எங்கட தமிழண்ட நிலையும்’
‘சரி சுரேஷ். வா இண்டைக்கு ஒரு மாதத்துக்கு மேலே சோறு சாப்பிட்டு தண்ணிய மட்டும் குடிச்சுக்கிட்டு எத்தன நாளைக்குத் தான் இந்த வாழைத் தோட்டத்தில இருக்கப் போற. வா சாப்பிடுவம்’

‘என்னன்று அக்கா சாப்பிடுறது’

‘வா…வா…சாப்பிட்டிட்டு யோசிப் பம்…’ என்று ராசாத்தி அக்கா கூறியதும் சுரேஷ் ஒரு முடிவுக்கு வருகின்றான். எனது உறவினர்களையும் ஊர் மக்களையும் கொன்ற அந்த எதிரியை பழிவாங்கப்போவதாக மனதுக்குள் சிந்தித்துக்கொண்டு அன்று ராசாத்தி அக்கா சமைத்த சோற்றையும் கணவாய் கறியையும் ராசாத்தி அக்காவுடன் சேர்ந்து சாப்பிட்டான்.
இரவு சாப்பாடு கொண்டு செல்கின்றாள் ராசாத்தி அக்கா. அங்கு சுரேஷைக் காணவில்லை. மேசையில் ஒரு கடிதம் இருக்கின்றது. அதைக்கண்டதும் பிரித்துப் படிக்கின்றாள் ‘என்னை யாரும் தேட வேண்டாம். நான் எதிரி யைப் பழிவாங்கப் போகின்றேன். எனது சொத்துக்களை எல்லாம் அநாதையானவர்களுக்கு கொடுங் கள்’ என்று எழுதி வைத்து விட்டுச் சென்றான். ராசாத்தி அக்காவிற்கு விளங்கிவிட்டது. படலையைப் பூட்டிவிட்டு வீதியில் வந்து நின்று கொண்டு வானத்தைப் பார்க் கின்றாள். அவளைப் பார்த்து ஒரு நட்சத்திரம் கண்சிமிட்டுகின்றது.

 

SHARE