வடமாகாண ஆளுநர் நியமனமும், ஏமாற்று அரசியலும்

107

யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்குமா? என்ற கேள்வியோடு தமிழ் அரசியல் பிரதி நிதிகள் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் வட மாகாணத்தினுடைய ஆளுநர் நியமனம் என்பது ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சிப் பதவி வழங்கியது போன்ற ஒரு ஏமாற்று அரசியலே. தமிழர்களின் விடயங்களை, சர்வதேச நாடுக ளின் பார்வைக்கு நம்பவைத்து கழுத்தறுக்கும் நடவடிக்கையினையே இலங்கையின் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் செவ்வனவே கையாண்டு செய்து வந்திருக்கின்றன. இந்நிலை தொடரத்தான் போகின்றது.

அந்த அடிப்படையின் கீழ் பார்க்கின்றபொழுது வடமாகாணத்தில் தற்போது ஆளுநராக நியமனம் பெற்றிருக்கின்ற திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கடந்த காலங்களில் வவுனியா, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் அரச அதிபராக கடமையாற்றியிருந்தார். பின்னர் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக, சுகாதார அமைச்சின் செயலாளராக பல உயர் பதவிகளை வகித்து வந்த நிலையில் தான் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கிலும், கிழக்கிலும் இவர் அரச அதிபராக இருந்தபோது இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அதனை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிக்கச் செய்தார். அரசாங்கத்தின் தேவை என்னவெனில், ஒரு தமிழரை அரச உயர் பதவியில் கடமையில் அமர்த்தியிருக்கிறோம் என சர்வதேச மட்டத்தில் காண்பித்து தமது அரசியலை நகர்த்துவதேயாகும்.

இவர் அரச அதிபராக இருந்த காலகட்டத்தில் மக்களுக்கு காணிகளை சிறிது தயக்கமும் இன்றி வழங்கியிருக்கின்றார். இலஞ்சம் வாங்குவதில் பெயர் பெற்ற இவர் தனக்கான ஒரு கட்டமைப்பினையும் உருவாக்கியிருந்தார் எனக் கூறப்படுகிறது. வியாபார நண்பர்களாக முஸ்லீம்களையே இவர் இணைத்துக்கொண்டிருந்ததாகவும், இவருடைய பெயரில் சொத்துக்கள் குவிக்கப்பட்டிருக்கிறது என்று பலர் கூறினாலும் அந்தச் சொத்துக்கள் அனைத்தும் பிறருடைய பெயரி லேயே பதிவாகியிருக்கிறது.

ஒரு அரச அதிபர் அல்லது சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆடம்பர வாழ்க்கை வாழக்கூடாது அல்லது சொகுசு வாகனங்களில் உலா வரக்கூடாது என்று கூறவில்லை. இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளின் மூலமாக தமிழ் மக்களது அரசியல் போராட்டங்கள் அல்லது வடகிழக்கு தமிழ் மக்களது அரசியல் நேர் பாதை தகர்க்கப்படுகிறது என்றே கூறவேண்டும்.

தாம் ஆட்சி செய்கின்ற காலப்பகுதிக்குள் இவரை வைத்து இந்த வடபகுதியின் அபிவிருத்திகளை மேற்கொண்டு அல்லது தமிழ் மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை இனங்கண்டு அதன் ஊடாக பல விடயங்களை மேற்கொள்கின்றபோது தமிழ் மக்களது மனதை வென்றுவிடலாம் என்று தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஒரு நாட்டில் நீண்டதொரு யுத்தத்தை, தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்கள் என்ன நோக்கத்தோடு ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்டு அவர்களது அரசியல் களம் நகர்த்தப்பட்டதோ அதற்கானதொரு முழுமையா னத் தீர்வை தமிழ்த் தலைமைகள் பெற்றுக்கொடுக்கவேண்டும். இதே தமிழ்த் தலைமைகள் ஊழல்வாதியாக செயற்பட்ட சார்ள்ஸ் அவர்களை துரத்தியடித்தார்கள். குறைகூறினார்கள்.

எனவே இவர் வவுனியாவிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிற்கு அரச அதிபராக நியமிக்கப்பட்டு அங்கும் ஊழல் செய்கிறார் என குற்றஞ்சாட்டப்பட்டு, மக்களால் துரத்தியடிக்கப்பட்டார். மக்களால் துரத்தப்பட்டாலும் உயர் அதி காரிகள் இவரது ஊழலில் நேர்மைத்தன்மையைக் கண்டு அவரை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமித்தார்கள். இவரால் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கில் வாழ்கின்ற மக்கள் வர்த்தக பொருளாதார ரீதியில் முன்னேற்றங்களை அடைவார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தானும் எடுத்துக்கொண்டு பிறரையும் வாழ வைக்கும் மனோபாவம் கொண்டவர் தான் தற்போதைய ஆளுநர் சார்ள்ஸ் அவர்கள்.

அரசாங்கத்தால் பணிக்கப்படுகின்ற அனைத்து விடயங்களையும் மிகக் கச்சிதமாக செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர் இவர். இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை வரலாறுகள் கூட பல ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டது.

தமிழ் மக்களுக்கான உரிமை சார்ந்த விடயங்கள் என்ற வகை யில் அத்தனையும் மழுங்கடிக்கின்ற வகையில் தான் இவரது நியம னம் காணப்படுகிறது. கடந்த காலங்களில் ஆளுநர் நியமனங்களுக்கு கருப்புக் கொடி காட்டிய தமிழ்ப் பிரதிநிதிகள் ஏன் இவருடைய நியமனத்திற்கு கருப்புக்கொடி காட்டவில்லை. அவ்வாறாகவிருந்தால் இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவருடன் இணைந்து, அரசுடன் இணைந்து ஒத்து ஊதுகின்ற செயல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போகின்றார்களா?

அவ்வாறெனில் இவர் தமிழர்களுடைய நலன் சார்ந்;த விடயங்களில் அக்கறையுடன் செயற்படுவார் என நினைக்க முடியாது. இருந்தும் வழிப்போக்கர்களுக்கும், வியாபாரிகளுக்கும், சொத்துக்கள் குவிக்கின்றவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகவே வடமாகாணத்தின் தற்போதைய ஆளுநர் அமைவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இவருக்கு முன்னர் வடக்கின் ஆளுநர்களாகச் செயற்பட்ட சந்திரசிறி, ரெஜினோல்ட் குரே, சுரேன் ராகவன் போன்றவர்கள் அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு செயற்பட்டவர்கள். தமிழ் மக்களுடைய போராட்ட வலி உணர்வு என்னவென்று தெரியாதவர்கள். இவ்வாறு வடமாகாணத்திற்கு நியமிக்கப்படும் ஒவ்வொரு ஆளுநர்களும் அரசி யல் பின்புலத்துடன் தான் களமிறக்கப்படுகின்றவர்கள். இதனை திட்டமிட்டே கடந்த கால, தற்போதைய அரசும் செய்து வருகின்றது.

திருமதி.சார்ள்ஸ் அவர்களுடைய கடந்த கால அரசாங்க அதிபர் பதவி என்பது வவுனியா மாவட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்தது. இதனால் அரச திணைக்களத்தில் உள்ளவர்கள், அரசியல் வாதிகள், பொது மக்கள் என இவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருந்தனர். இருந்தபோதிலும் இவர் ஒரு தூர நோக்கு சிந்தனை கொண்டவர். அபிவிருத்தி குறித்து நன்கு அறிந்தவர். அவருடைய ஆளுமைக்கு கிடைத்த பரிசே தற்போதைய வடமாகாணத்தின் ஆளுநராக நியமனம் பெற்றிருக்கின்றார். குறிப்பாக வடக்கில் இராணுவம் காணிகளை சுவீகரித்திருக்கிறது. இதனை இவர் விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வாரா?, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவாரா?, சட்டவிரோத மதுபானசாலைகளுக்கு தடை விதிப்பாரா?. இவரது கடந்த காலத்தில் நிர்வாக மோசடிகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்றது. இவற்றிற்கான தீர்வு அன்றும் இல்லை, இனியும் கிடைக்கப்போவதில்லை. ஒருவேளை இவர் மக்களது மனதை மீண்டும் வென்று பாராளுமன்ற வேட்பாளராக களமிறக்கப்பட்டு அல்லது தேசியப் பட்டியல் ஊடாக வாய்ப்பினை வழங்கி, அமைச்சுப் பதவியினை வழங்குவதற்கான வாய்ப்புக்களும் இவருக்கு இருக்கிறது. காலவோட்டத்தில் எதுவும் நிகழலாம்.

SHARE