ஆசிரியரை நியமிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

35

வவுனியா மூன்று முறிப்பு குணானந்த ஆரம்ப பிரிவு வித்தியாலயத்தில் 5ஆம் ஆண்டுக்கு கற்பிப்பதற்கான ஆசிரியரை நியமிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் 5ஆம் ஆண்டுக்கு கற்பித்து வந்த ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய ஆண்டில் 5ஆம் ஆண்டுக்கு நுழைந்த மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவித்து பெற்றோர்கள் இன்று(வியாழக்கிழமை) பாடசாலைக்கு முன்பாக தமது பிள்ளைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்த நிலையில், வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனையின் சிங்கள பிரிவுக்கான கோட்டக்கல்வி அதிகாரி வீரசிங்க அங்கு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியிருந்த நிலையில் நகரசபை மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது கோட்டக்கல்வி அதிகாரியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முரண்பட்டுக்கொண்ட நிலையில் வேறு பாடசாலையில் இருந்து 5ஆம் ஆண்டுக்கு ஆசிரியர் ஒருவரை உடன் நியமிப்பதாக தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.

SHARE