அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் தேர்தல்கள் ஆணைக்குழு

39

2020ஆம் ஆண்டிற்குரிய புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கான பத்திரிகை அறிவிப்பு நாளை (வியாழக்கிழமை) தேசிய பத்திரிகைகளில் வௌியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு 58ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் திருத்தச் சட்டத்தின் 1981ஆம் முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிப்புப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு சுமார் ஒரு கோடியே 62 இலட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததாகவும் கடந்த செப்டெம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பதிவின் மூலம் சுமார் மூன்று இலட்சம் புதிய வாக்காளர்கள் பதியப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE