ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் – கெஹலிய ரம்புக்வெல

44

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளே இன்று விரோதிகள் அதிகரித்துள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இவருக்கு வெளியில் விரோதிகள் எவரும் கிடையாது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளே இன்று விரோதிகள் அதிகரித்துள்ளார்கள். முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பினை 200 ஆக அதிகரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எம்மை பொறுத்தவரையில் இவருக்கு சர்வதேச ரீதியிலும், தனிப்பட்ட ரீதியிலும் விரோதிகள் எவரும் கிடையாது. சர்வதேசத்தின் நன்மதிப்பினை பெற்றுள்ளார்.

இவ்வாறான நிலையில் அவர் தனது பாதுகாப்பை பலப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.

இலங்கை அரசியலில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் என முக்கிய பதவி வகித்த இவரது பாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பாகும். இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ முரண்பாடு தீவிரமடைந்துள்ளது.

ஆகவே தனக்கு கட்சி தலைமையகமான சிறிகொதாவிற்குள் பாதுகாப்பு அவசியம் என்பதை கருத்திற் கொண்டு அவர் பாதுகாப்பை பலப்படுத்துமாறு குறிப்பிட்டிருக்கலாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE