சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள்

29
டேபிள் டென்னிஸ்- ஒலிம்பிக் வாய்ப்பை நெருங்கும் இந்திய அணிகள்

மனிகா பத்ரா
ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டேபிள் டென்னிஸ் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டி போர்ச்சுகல் நாட்டில் உள்ள கோன்டோமர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடிய இந்திய அணி, லக்சம்பர்க் அணியை சந்தித்தது. இந்திய அணி 3-0 என்ற கணக்கில் லக்சம்பர்க்கை வீழ்த்தியது. ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் சத்யன், சரத்கமல் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்-ஹர்மீத் தேசாய் ஜோடி வெற்றி கண்டது.

பெண்கள் பிரிவில் இந்திய அணி, சுவீடனை எதிர்கொண்டது. பரபரப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் சுவீடனை வீழ்த்தியது. ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் மனிகா பத்ரா 2 ஆட்டத்திலும், அர்ச்சனா காமத் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றனர். இந்திய வீராங்கனை முகர்ஜி அய்கா ஒற்றையர் ஆட்டத்தில் தோல்வி அடைந்தார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ச்சனா காமத்-முகர்ஜி அய்கா இணை தோல்வியை சந்தித்தது.

இன்று நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களில் இந்திய ஆண்கள் அணி, சுலோவேனியாவையும், இந்திய பெண்கள் அணி ருமேனியாவையும் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்களில் இந்திய அணிகள் வெற்றி பெற்றால் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக தடம் பதித்த வரலாறு படைக்கும்.

SHARE