இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

53

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இந்த நாட்டின் ஒரு சிறிய தீவிரவாத பிரிவினரால் செயற்படுத்தப்பட்டதாகும்.

இந்த விடயத்தை அனைவரும் அறிவோம். இதற்காக நாட்டிலுள்ள முழு முஸ்லிம் சமூகத்தையும் பழிவாங்குவது சரிதானா?

சஜித் பிரேமதாசவுக்கு முதுகெழும்பு இருக்கின்றது. தவறு என்றால் அதனை அஞ்சாமல் தவறுதான் என்று சுட்டிக்காட்ட கூடிய தைரியம் எனக்கு இருக்கின்றது.

என்னைப் பற்றி பொய்யான பல விடயங்கள் கூறப்படுகின்றன. மேலும் காட்போட் பௌத்தர்களுக்கு  (பேரளவு பௌத்தர்கள்) கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

உங்களுக்கு நான் ஒருபோதும் பயமில்லை. உண்மையான பௌத்த ஆகமத்தை கடைப்பிடித்த ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் இனம், மதம் மற்றும் குலப்பேதமின்றி மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இதேவேளை எமது ஆட்சியில் மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு சிறந்த எதிர்காலத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE