தமிழருக்கான அரசியல் தீர்வு கோட்டபாய அரசு வழங்குமா?

75

 

சிங்களப் பெரும்பான்மை இனமானது இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்களை அடிமைகளாகவும் அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் தமிழ் தலைமைகள் அகிம்சை ரீதியாக பல போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போதே ஆட்சியாளர்கள் அகிம்சை ரீதியான போராட்டங்கள் வலுப்பெறும் பொழுதெல்லாம் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்த பின்னர் அவ் ஒப்பந்தங்களை கிழத்து எறிந்தனர். அப்பொழுது இருந்த தமிழ் தலைமைகள் அரசின் சூழ்ச்சி விளங்காமல் அல்லது விளங்கியும் எதுவும் செய்ய முடியாது கையேறு நிலையில் ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுவதும் பின்னர் அவ் ஒப்பந்தங்கள் கிழிக்கப்பட்டதன் பின்னர் அதற்கு அகிம்சை ரீதியாக போராட்டம் நடத்துவதும் என்று காலங்கள் ஓடின.
இந்நிலையில் இனியும் அகிம்சை ரீதியாக எதுவும் பெறமுடியாத நிலையில் ஆயுதப் போராட்டங்கள் உருவெடுத்து இலங்கை முழுவதும் இரத்த ஆறு ஓடியது. ஆயுதப் போராட்ட காலங்களிலும் இடைக்கிடை சமாதானப் பேச்சு வார்த்தைகளும், ஒப்பந்தங்களும் உலக நாடுகளின் மத்தியஸ்தளங்கள் ஊடான ஒப்பந்தங்கள் என பல்வேறு முறையில் தமிழர்களின் அரசியல் ரீதியான முடிவை பெற முயற்சித்தனர். உலக நாடுகளின் மத்தியஸ்துடன் ஒப்பந்தங்கள் கூட இந்த சிங்கள பேரினவாத அரசுகளால் கிழித்தெறியப்பட்டது. 30 வருடங்கள் இடம்பெற்ற ஆயுதப் போராட்டங்கள் பல தியாகங்கள், பல உயிரிழப்புக்கள் பல சொத்துக்கள் அழிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்றது. அளப்பெரிய தியாகங்கள் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் இடம்பெற்றது. மிகப் பெரிய மனிதப் பேரவலங்களும் இடம்பெற்றது. வரலாறு காணாத இடப் பெயர்வுகள் எண்ணிலடங்காதோர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
ஆனால் தமிழினத்தின் அரசியல் ரீதியான தாக்கம் தீர்க்கப்படவில்லை. மீண்டும் சிங்களப் பேரினவாத அடக்கு முறையில் தமிழினம் விழத் தொடங்கியுள்ளது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அகிம்சை ரீதியான அரசியல் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் ஓர் நல்லாட்சி என்ற போர்வையில் ஆட்சி இடம்பெற்றது. இதில் ஓர் விடயத்தை குறிப்பிட வேண்டும். 1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கை சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சி நடாத்தி வந்தனர். இக்காலகட்டங்களில் ஆட்சி செய்யும் ஒரு தரப்பு தமிழ் மக்களும் தீர்வு கொடுக்க முன்வருவது போல் நடித்தாலும் அதனை மறுபுறம் உள்ள கட்சி அதாவது எதிர்கட்சி என்ற போர்வையில் உள்ள பேரினவாத கட்சி தடுக்கும் இது தொடர்ந்து கொண்டு இருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சியில் இலங்கையின் இரு பிரதான கட்சியும் சேர்ந்து ஆட்சி நடாத்தியது. சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர் ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளவர் பிரதமராகவும் இருந்தனர். தமிழர் தரப்பு எதிர்க்கட்சியாக இருந்தது. இக்காலகட்டத்தில் தமிழினத்துக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வு வழங்குவதற்கு பெரியவினை எதிர்ப்பு இல்லாமல் இருந்த நிலையிலும் இவ் இரு பேரினவாத கட்சி ஆட்சி செய்வதற்கு ஆதரவளித்த பங்காளிகட்சியான தமிழர் கட்சியும் இதற்கான ஆக்கபூர்வமான எதுவித செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. இதில் இருந்து ஓர் விடயத்தை புரிந்து கொள்ள முடியும். யார் ஆட்சிக்கு வந்தாலும் சிங்களப் பேரினவாத கொள்கையை விட்டு தமிழர்களுக்கான தீர்வை தர முன்வர மாட்டாது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்நிலையில் கடந்த 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டு வந்து மிகப்பெரிய ஓர் தமிழின மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தி பலரை காணாமல் ஆக்கி தமிழின மனங்களில் தீராத வடுவை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரரான கோட்டபாய ராஜபக்ச அவர்களும் சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து பொதுஜன பெரமுன என்னும் கட்சியை உருவாக்கி அதனூடாக 2019 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ச அவர்கள் சிங்களப் பெரும்பான்மை இனத்தின் வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இவர் ஓர் இராணுவ சித்தாந்தம் கொண்டவராக காணப்பட்ட நிலையில் ஜனாதிபதி ஆனவுடன் சகல சிவில் நடவடிக்கைகளுக்கும் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதிகளை நியமித்தார். நாடு முழுவதும் இராணுவப் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டது. உலகை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா வைரசை எமது நாட்டில் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் முப்படையினரையும் பயன்படுத்தி வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்திய நாடுகள் வரிசையில் தற்பொழுது இலங்கையும் காணப்படும் நிலையில் அரசு பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்டு விட்;டது. கொரோனாவை கட்டுப்படுத்திய நிலையில் அது முற்றாக நாட்டில் இருந்து அகற்றப்படவில்லை. அதன் தாக்கம் தொடர்ந்து கொண்டு இருப்பதாக சுகாதாரத்துறையில் தெரிவிக்கின்றனர். ஆனால் அரசு எதனையும் செவி கொடுக்காமல் தேர்தலை வைத்து பாராளுமன்றத்தில் 2ஃ3 பெரும் பான்மையை பெறுவதிலேயே கண்ணாய் உள்ளது. இதில் ஜனாதிபதியாக கோட்டபாய அவர்களும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அவரது அண்ணனான மகிந்த ராஜபக்ச அவர்கள் பிரதமராகவும் இருக்கலாம் அதற்கான செயற்பாடுகளின் முழு வீட்சுடன் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் 2ஃ3 பெரும்பான்மை பெற வேண்டுமாயின் தமிழ் மக்களின் கணிசமான வாக்குகள் தேவைப்படுகின்றது. இந்நிலையில் கோட்டபாய அரசு தமிழர்களின் வாக்குகளை பெற மீண்டும் பல தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி தமது இலக்கை அடைய முயற்சிக்கின்றது. தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகளை ஒருபுறம் காட்டிக்கொண்டு மறுபுறம் அரசியல் தீர்வு விடயத்தை செயற்படுத்தப்போவதாகவும் பிரதம வேட்பாளர் மகிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் வாக்குகளை பெற அரசு இருவழிகளை தெரிவு செய்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. ஒன்று அரசியல் மற்றும் அபிவிருத்திகளை காட்டி வாக்குகளை பெற முயற்சிக்கின்ற வேளையில் மறுபுறம் இராணுவ அச்சுறுத்தல் கொண்டு தமிழ் மக்களை பயமுறுத்தி பெற முயற்சிக்கின்றது. கொரோனாவை காட்டி தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் சுவரொட்டிகள் பதாதைகள் என்பனவற்றை வைப்பதற்கு தடை செய்து ஏனைய கட்சிகளை ஓரங்கட்டி தேர்தலில் மகத்தான வெற்றி பெற முயற்சிக்கின்றது. வடகிழக்கு பகுதிகளில் போட்டியிடும் தமிழ் கட்சிகளின் தேர்தல் பிரச்சார முயற்சிகளுக்கு பல முட்டுக்கட்டைகளை போட்டு அவர்களின் வெற்றிகளை தடுப்பதற்கு முயற்சி செய்கின்றது. அடுத்து தேர்தல்களில் அரசு வெற்றி பெற்று 2ஃ3 பெரும்பான்மை பெற்றாலும் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான தீர்வு கிடைக்குமா தைரியமாக முடிவெடுக்கும் தன்மை முன்பிருந்த ஜனாதிபதிகளை விட காத்திரமான முடிவுகளை எடுக்கும் திறன் கொண்ட போட்டபாய ராஜபக்ச அவர்கள் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான சரியான தீர்வை தருவாரா அரசியல் தீர்வை தர அரசியலமைப்பை மாற்ற வேண்டும். அதனை செய்வாரா இயல்பாகவே இராணுவ சிந்தனையுள்ளவராக காணப்படும் கோட்டபாய ராஜபக்ச அவர்கள் இராணுவ ரீதியாக தமிழ் மக்களை அடக்கியாழ்வதில் அவர் முயற்சியினை மேற்கொள்வது தெரியவருகின்றது.
இதற்கு அண்மையில் வட பகுதியில் இடம்பெறும் இராணுவ அத்துமீறல்களை குறிப்பிடலாம். களவாக மணல் ஏற்றியமை தொடர்பாக அதனை மறிக்க சென்ற இராணுவ வீரரை மோதித்தள்ளி விட்டு தப்பி சென்ற யாழ் மாவட்ட இளைஞர் ஒருவரை சுட்டு கொன்றமை வடமராட்சி பகுதிகளில் அளவுக்கதிகமான இராணுவ அச்சுறுத்தல்கள் நயினைதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்குள் பாதணி அணிந்தவாறு சென்ற படையினர் வட கிழக்கு பகுதிகளில் அளவுக்கதிகமான சோதனை சாவடிகள் அளவுக்கதிகமான மற்றும் அச்சுறுத்தும் வகையில் ரோந்து நடவடிக்கைகள் என முழுக்க முழுக்க இராணுவ அச்சுறுத்தல் உள்ள வலயமாக வடகிழக்கு பகுதி காணப்படுகின்றது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு வழங்குவார்கள் என நினைப்பது மிகப்பெரிய முட்டாள் தனமாகும். கிழக்கு மாகாணத்தில் சமய வரலாற்று தொல்பொருள் ஆய்வுகள் மற்றும் அவற்றை பாதுகாப்பதற்கான செயலணி இராணுவத்தை நியமித்தது. தமிழர்களின் சமய வரலாறுகள் அனைத்தும் இல்லாதொழிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அம் மாவட்ட மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழர்களின் சமய கலாச்சார பண்பாடுகளை அழித்தொழித்து சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவி முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசமாக்கி தமிழர்களை ஏதிலிகளாக்க கடும் பிரயத்தனம் செய்ய அரசு முயல்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் ரீதியான அதிகாரங்களை அரசு வழங்காது என்பதும் தமிழர்களின் அரசியல் கனவு கானல் நீராக தான் செல்லும் என்பது கண்கூடு யுத்தம் முடிவுற்று பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அரசியல் தீர்வு மட்டுமல்ல அதனுடன் சம்பந்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான முடிவு மற்றும் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் பூர்வீக நிலங்களை விடுவித்தல் போன்ற குறைந்தளவான தீர்வுகளை கூட தர முடியாத இந்த சிங்கள ஏகாதிபத்திய அரசு தமிழர்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் என்பதையும் அதனை பெற்று தருவோம் என தேர்தல் வாக்குறுதிகள் வழங்கும் எமது தமிழ் தலைமைகளையும் மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதே மானமுள்ள தமிழனின் கோரிக்கையாகும்.
கடந்த 30 வருடங்கள் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் விடுதலைப்புலிகள் உட்பட பல ஆயுதக்குழுக்கள் உருவாகி போராடி ஏதுமாற்ற நிலையில் இப்பொழுது அரசியல் ரீதியாக ஒற்றுமையாக ஓர் அணியில் சென்று ஓரளவுக்கேனும் அரசியல் தீர்வினை பெறுவதை விட்டு அதற்குள்ளும் பிரிந்து பல துண்டங்களாக உடைத்து நின்று எதனை சாதிக்க போகின்றார்கள். ஓர் அணியில் இல்லாமல் சிதறி நின்று தமிழர்களுக்கு தீர்வு எடுத்து தருவோம் என மக்களை முட்டாளாக்கி செயற்படும் கட்சிகளை இனங்கண்டு தமிழ் மக்கள் ஓரங்கட்ட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும். நடுஆற்றில் விடப்பட்டுள்ள தமிழினமே சிந்தித்து செயற்படு காலம் உனக்காக ஓர் நாள் விடியும்.

SHARE