சட்ட விரோத வலையினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடவிருந்த படகுகள் மீட்பு

55

மட்டக்களப்பு கடற்தொழில் நீரியல் வள திணைக்கள எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை சட்ட விரோத வலையினை பயன்படுத்தி கடலில் மீன்பிடியில் ஈடுபட தயாராயிருந்த மூன்று இயந்திர படகுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளும் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கடற்தொழில் நீரியல் வள திணைக்கள எல்லைக்குட்பட்ட நொச்சிமுனைப்பகுதியிலேயே இவை இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கடற்தொழில் நீரியல் வள திணைக்கள பணிப்பாளர் ருக்ஷான் குரூஸ் தெரிவித்தார்.

இன்று காலை விசேட அதிரடிப்படையினர், கடற்படையினர்,இராணுவத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்ட விரோத சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது இலங்கையில் தடைபெற்றப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதாக மீனவர்கள் வழங்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கடற்தொழில் நீரியல் வள திணைக்கள இவ்வாறான மீன்பிடிகளை தடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றது.

இதனடிப்படையில் நொச்சிமுனைப்பகுதியில் கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு சட்ட விரோத வலைகளுடன் தயாராகயிருந்த மூன்று இயந்திர இணைப்பு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள மீன்வாடியில் இருந்த சட்ட விரோத வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சுற்றுவளைப்பின்போது சுமார் 35இலட்சம் ரூபா பெறுமதியான சட்ட விரோத வலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு கடற்தொழில் நீரியல் வள திணைக்கள பணிப்பாளர் ருக்ஷான் குரூஸ் தெரிவித்தார்.

 

SHARE