2ஆவது டெஸ்ட் – 493 ஓட்டங்களுக்கு இன்னிங்ஸை நிறுத்திக்கொண்ட இலங்கை

24
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 493 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட களமிங்கிய அவ்வணியின் தொடக்க வீரர்களான திமுத் கருணாரட்ன மற்றும் லஹிரு திரிமன்னே ஆகியோர் சதம் கடந்தனர்.

அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தனது 12 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து 118 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து லஹிரு திரிமன்னே தனது 3 ஆவது டெஸ்ட் சதத்தைப் பெற்று 140 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய ஏஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். நிதானமாக துடுப்பெடுத்தாடிய ஒஷாட பெர்ணான்டோ 81 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இடை வரிசைத் துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க 30 ஓட்டங்களைப் பெற்றார்.

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடையும் போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 469 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆடுகளத்தில் நிரோஷன் டிக்வெல்ல, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் இருந்தனர்.

இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமான வேளை மேலதிகமாக 24 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் 7 ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. ரமேஸ் மெண்டிஸ் 33 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். ஆடுகளத்தில் டிக்வெல்ல 77 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழக்காது இருந்தார்.

இந்நிலையில், தமது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்துவதாக அணித்தலைவர் திமுத் கருணாரட்ன அறிவித்தார். இதற்கமைய தற்சமயம் பங்களாதேஷ் அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

SHARE