அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

25

 

கல்முனை விவகாரத்தைப் போல் அரசியல் கைதிகள் விடயத்திலும் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொதுப் பொறிமுறையை முன்வைத்துச் செயற்பட வேண்டும் எனத் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாகக் கடந்த வாரம் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் ஒன்றிணைந்து அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் ‘அது ஒரு ஆரோக்கியமான அவசியமான ஒருங்கிணைந்த முன்னெடுப்பாகும். இதேபோன்று தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கைதிகளின் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் 40 பேரும், அனுராதபுரம் சிறைச்சாலையில் 27 பேரும், நாட்டில் உள்ள மேலும் பல்வேறு சிறைகளில் 12 பேரும் என மொத்தமாக 79 தமிழ் அரசியல் கைதிகள் சிறைத்தடுப்பில் உள்ளார்கள்.

அவர்கள் 25 முதற்கொண்டு 10 வருட காலமாகத் தொடர் சிறையில் உள்ளார்கள். அவர்களுடன் இருந்த பல அரசியல் கைதிகள் சிறைக்குள்ளேயே இறக்கின்றனர். நெடுங்காலமாக குடும்ப உறவுகளிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதால் உடல், உள ரீதியில் பாதிக்கப்பட்டு 90 வீதமானவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார்கள்அத்தோடு சிறைகளில் ஏற்பட்ட இட நெருக்கடியைக் குறைக்கும் முகமாக அரசால் இரு வேறு தடவைகளில் ஆயிரக்கணக்கான கைதிகள் விசேட ஏற்பாடுகளின் ஊடாக விடுவிக்கப்பட்டனர்.

எனினும், தமிழ் அரசியல் கைதிகள் எவருக்கும் அதில் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. எனவே, இந்தத் தருணத்திலாவது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர் அணிகளாக இருந்தாலும் சரி கட்சி, கொள்கை வேறுபாடுகளைக் கடந்து அரசியல் கைதிகள் தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைத்து தமிழ்க் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒரு பொதுப் பொறிமுறையை முன்வைத்து மனிதாபிமான அடிப்படையில் பேச்சில் ஈடுபட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது .

SHARE