இந்தியாவில் முதல் அன்னையர் தினம் கொண்டாடிய ரொறன்ரோ தம்பதி

40

 

குழந்தை ஒன்றை தத்தெடுக்கும் பொருட்டு இந்தியாவுக்கு சென்ற ரொறன்ரோ தம்பதி, நாளும் அதிகரிக்கும் கொரோனா பீதிகளுக்கு நடுவே முதல் அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளனர்.

ஹரி கோபால் கார்க் மற்றும் கோமல் கார்க் தம்பதி இந்த ஆண்டு துவக்கத்தில் பிள்ளை ஒன்றை தத்தெடுக்கும் பொருட்டு இந்தியாவுக்கு சென்றனர்.

முறைப்படி குழந்தையை தத்தெடுத்து அதற்கு காவேரி என பெயரும் சூட்டியுள்ளனர். ஆனால் மார்ச் மாதத்தில் குழந்தையின் முதல் பிறந்தநாளும் கொண்டாடிய நிலையில், சில நாட்கள் மருத்துவமனையிலும் செலவிட நேர்ந்துள்ளது.

இந்த நிலையில் குழந்தை காவேரியின் பிறந்தநாளும் அன்னையர் தினத்தையும் ஒன்றாக கனடாவில் வைத்து கொண்டாட திட்டமிட்டு வந்தனர்.

ஆனால் ரொறன்ரோவுக்கு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து உள்வரும் விமானங்களை கனேடிய அரசு தடை செய்தது.

இந்தியாவில் தற்போதைய நிலை மிகவும் மோசமாகவும் அச்சத்தை ஏற்படுத்துவதுமாக இருப்பதால், விரைவில் கனடாவிற்கு திரும்பிச் செல்ல விரும்புகிறோம் என்று கோமல் கார்க் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி குழந்தை காவேரியுடன் அங்கு எங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க ஆசைப்படுகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்தியாவில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க கார்க் குடும்பம் முடிவு செய்தது. கடந்த டிசம்பர் மாதம் உரிய முறைப்படி குழந்தை காவேரியை கார்க் தம்பதி தத்தெடுத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் ஏப்ரல் 21 அன்று கனடாவுக்கு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடித்துக் கொண்டு எப்ரல் 25ம் திகதி ரொறன்ரோ திரும்ப திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக பரவி வரும் நிலையில், கார்க் தம்பதி செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இந்திய நிர்வாகமும் கொரோனா பரவல் கடுப்படுத்தும் நடவடிக்கைகளில் மெத்தனமாகவே செயல்பட்டு வருவதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது கனடாவுக்கான விமான சேவைகளும் ரத்தான நிலையில், இந்தியாவில் சிக்கிக்கொண்டுள்ளதாக கோபால் கார்க் தெரிவித்துள்ளார்.

SHARE