மசூதிக்கு வெளியே உயிருக்கு போராடிய இளைஞர்:

15

 

ஹாமில்டனில் மசூதிக்கு வெளியே துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்ற தவறிய இரு அவசர மருத்துவ உதவியாளர்களை குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இருவருக்குமான தீர்ப்பு வெளியிடப்படவில்லை என்றாலும், நீதி நிலைநாட்டப்பட்டதாக மரணமடைந்த இளைஞரின் தந்தை மஜீத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 டிசம்பர் 2ம் திகதி தொடர்புடைய இச்சம்பவம் நடந்துள்ளது. ஹாமில்டன் மசூதிக்கு வெளியே அறிமுகமல்லாத ஒருவருக்கு உதவ முயன்றுள்ளார் 19 வயதேயான Yosif Al-Hasnawi.

இந்த நிலையில் மர்ம நபரால் சுடப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அவசர மருத்துவ உதவியாளர்களான Steven Snively மற்றும் Christopher Marchant குற்றுயிரான அந்த இளைஞருக்கு உதவ முன்வரவில்லை என்றே கூறப்படுகிறது.

சம்பவம் நடந்து 40 நிமிடங்களுக்கு பிறகே, அதுவும் பொலிசார் சம்பவப்பகுதிக்கு சென்ற பின்னரே இளைஞர் Yosif Al-Hasnawi மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் 10 நிமிடங்களில் அவர் மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சரியான நேரத்தில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, அவர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டிருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என்றே கூறப்படுகிறது.

தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்ட அந்த மருத்துவ உதவியாளர்கள் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இறுதி தீர்ப்பானது மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE