பிரேமதாச ஆட்சியில் 300 மாணவர்களைக் கொன்று புதைத்த கொடூரம்!

58
புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்ட ஜனாதிபதி பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு, தன்னை ஒரு காருண்யம் நிறைந்த மனித உரிமைவாதி என்பது போலப் பேசி வருகிறார்.

ஆனால் அவரது தகப்பனார் ஆர.பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜே.வி.பி. இயக்கம் நடத்திய இரண்டாவது (1987 – 1989) ஆயுதக் கிளர்ச்சியை அடக்குவதாகச் சொல்லிக் கொண்டு ஏறத்தாழ 60,000 (அறுபதபயிரம்) சிங்கள மக்களை அவரது அரசு கொன்று குவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். இந்த நிகழ்வை இன்று பலர் மறந்துபோய் அல்லது மறைத்து அரசியல் செய்து வருகின்றனர்.

இந்தக் கொலைகளில் அதிர்ச்சியூட்டும் கொடூரமான விடயம் என்னவெனில், எம்பிலிபிட்டடிய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சுமார் 300 மாணவர்களை பிரேமதாச அரசின் கூலிப்படையினர் பிடித்துச் சென்று, கூட்டாகக் கொலை செய்து, சூரியகந்த என்ற இடத்தில் புதைத்தமையாகும். அவர்களைக் கொலை செய்ததிற்கான ஒரேயொரு காரணம் அவர்கள் அனைவரும் ஜே.வி.பி. ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தினாலாகும்.

இந்த மாணவர்களின் புதைகுழி 1994இல் அடையாளம் காணப்பட்டு தோண்டிப் பார்த்ததில் மாணவர்களின் ஏராளமான எலும்புக் கூடுகள் காணப்பட்டன.

அதேபோல, 1989இல் பொலிசாரால் கொலை செய்யப்பட்ட இன்னொரு 36 பேரின் சடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று அங்கும்புர என்ற இடத்திலும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் சத்துருகொண்டான், மயிலியன்தனை, கிழக்கு பல்கலைக்கழகம் என்பனவற்றில் நடத்தப்பட்ட அரச படைகளின் கொலைகளில் குழந்தைகள், மாணவர்கள், வயோதிபர்கள், பெண்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். வடக்கில் நெடுங்கேணி பிரதேசத்தில் ஒதியமலை என்ற கிராமத்திலும் பல பொதுமக்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டனர்.

அதேநேரத்தில், அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்துவதாகக் கூறிக்கொண்டு ஜே.வி.பியும், புலிகளும் கூட பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர்.

ஆனால் இலங்கையில் நடைபெற்ற இந்தப் படுகொலைகள் பற்றி ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசும் உரிய விசாரணைகள் நடத்தி இவற்றைப் புரிந்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து  இன்றுவரை தண்டிக்கவும் இல்லை.

இறுதி யுத்த நேரத்தில் முள்ளிவாய்க்காலில் அரச படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி திரும்பத் திரும்பப் பேசி வரும் ‘ சர்வதேச சமூகம்’ கூட இந்தப் படுகொலைகள் குறித்து மௌனமாகவே இருந்து வருகின்றது.

SHARE