இலங்கையில் ராஜபக்ச அரசாங்கம் கூண்டோடு வீடு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை

37

 

இலங்கையில் ராஜபக்ச அரசாங்கம் கூண்டோடு வீடு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை அரசாங்கம் இன்று பல்வேறு அடக்குமுறைகளை பயன்படுத்தி கருத்துரிமை சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை நசுக்க பார்க்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புறநகரான நீர்கொழும்பில் அடக்குமுறைகளுக்கு எதிராக என்ற தொனிப்பொருளில் மாரிஸ்டெல்லா கல்லூரி முன்பாக இன்று ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னேடுத்திருந்தனர்.

இதன்போது தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை அடக்குவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், பலாத்காரமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க தலைவர்கள் உட்பட ஏனையோர் விடுதலை செய்யப்பட வேண்டும், ஆர்ப்பாட்டம் செய்வதில் உள்ள உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

ஆசிரிய தொழிற்சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளரான பிரிட்டோ பெர்ணான்டோ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

இலங்கை அரசாங்கம் அடக்குமுறையை தற்போது கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. அதிலும் ஒரு நன்மையான விடயம் இடம்பெற்றிருக்கின்றது.

இன்று அரச அடக்குமுறைக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு வீதிக்கு இறங்கியிருக்கின்றனர். அந்த வகையில் நாங்களும் இன்று மக்களுடன் இணைந்து நீர்கொழும்பு பிரதேசவாசிகளாக வீதியில் இறங்கி போராட்டத்தை நடத்துகின்றோம்.

வெகுவிரைவில் இந்த அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு வருவார்கள்.

மக்கள் சக்திக்கு முன்பாக இந்த ராஜபக்ச அரசாங்கம் கூண்டோடு வீடு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்று ராஜபக்ச குடும்பத்திற்குள்ளேயே பல அமைச்சர்கள் முளைத்திருக்கின்றனர்.

அவர்களால் அமைக்கப்படுகின்ற சட்டங்கள் அவர்களுக்கு எதிராகவே இன்று திசை திரும்பியுள்ளன. கூடிய விரைவில் அவர்கள் செய்கின்ற இப்படியான செயற்பாடுகள் அவர்களுக்கு எதிராகவே நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE