இலங்கையின் கனவை சுக்கு நூறாக நொறுக்கிய தீபக் சஹார்! கடைசி கட்டத்தில் மாஸ் காட்டிய ஹீரோ

11

 

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது.

இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சரீத் அஷலன்கா 65 ஓட்டங்களும், சாமிகா கருணரத்னே 44 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணியில், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சஹால் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 276 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது.

துவக்க வீரர் ப்ரித்வி ஷா 13 ஓட்டங்களிலும், அடுத்து வந்த அதிரடி மன்னன் இஷான் கிஷான் ஒரு ஒட்டங்களிலும், கேப்டன் ஷிகார் தவான் 29 ஓட்டங்களிலும் என ஒரு கட்டத்தில், 3 விக்கெட் இழப்பிற்கு 65 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.

அதன் பின் மணீஷ் பாண்டே மற்றும் சூர்யகுமார் யாதவ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் சென்றது. இருப்பினும் மணீஷ் பாண்டே 37 ஓட்டங்களில் ரன் அவுட் ஆக, அடுத்து வந்த ஹார்திக் பாண்ட்யா டக் அவுட், க்ருணல் பாண்ட்யா 35, சூர்யகுமார் யாதவ் 53 ஓட்டங்கள் என அடுத்தடுத்து வெளியேறியதால், இந்திய அணியின் தோல்வி உறுதியானது.இலங்கை அணி வீரர்கள் வெற்றியின் கனவில் இருந்தனர், ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆரம்பத்தில் மெதுவாக விளையாடி வந்த தீபக் சஹார் கடைசி கட்டத்தில், திடீரென்று அதிரடி காட்ட, ஆட்டம் அப்படியே இந்தியா பக்கம் திரும்பியது.

கடைசி கட்ட ஓவர்களில் பவுண்டரிகள் பறக்க, மறும்புறம் புவனேஷ்வர்குமார் சிறப்பான பார்னர்ஷிப் கொடுக்க, இந்திய அணி கடைசி ஓவரின் முதல் பந்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடிய தீபக் சஹார் 82 பந்தில் 69 ஓட்டங்களும், புவனேஷ்வர்குமார் 28 பந்தில் 19 ஓட்டங்களும் குவித்தனர்.

SHARE