ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வு! கடும் அழுத்தங்களை சந்திக்கவுள்ள சிறிலங்கா

36

 

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.

இத் தொடரானது இலங்கை நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன் போது மனித உரிமை கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இன நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான யோசனைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.

கூட்டத் தொடரின் போது 47 உறுப்பு நாடுகளும் இதனை முன்வைக்க உள்ளன. இது தொடர்பிலான கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன.

இதன் போது சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பல கருத்துக்களை முன்வைக்க உள்ளதுடன் அரசாங்கம் சார்பில் ஜெனிவாவிலுள்ள ஐ. நா இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி இது தொடர்பில் விடயங்களை முன்வைக்கவுள்ளார்.

இலங்கையைத் தவிர ஆப்கானிஸ்தான், நிக்கரகுவா, எத்தியோப்பியா, மியன்மார் மற்றும் யெமன் போன்ற நாடுகளின் மனித உரிமை விடயம் தொடர்பிலும் ஆணையாளர் தனது கருத்துக்களை முன்வைப்பார்.

ஜெனிவாவில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைப்பெறும்.

கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றவுள்ளன.

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் குறித்து இந்த நாடுகள் கேள்விகளை எழுப்பலாம்.

மறுபுறம் ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட சர்வதேச பொறிமுறைக்கான அழுத்தங்களும் காணப்படும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே போன்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இணைய வழியாக கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார்.

இதன்போது தேசிய நல்லிணக்கம், காணாமல் போனோர் விவகாரம்மற்றும் நட்டஈடு வழங்குதல், பயங்கரவாத தடைச்சட்டம், மனித உரிமை நிலவரம் மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளார்.

இந்த நிலைப்பாட்டை கொழும்பில் உள்ள அனைத்துலக இராஜதந்திர மையங்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE