இலங்கை தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவு நீக்கப்பட்ட விவகாரம்!

10

 

இலங்கை தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தின், தரவுத்தளத்திலிருந்து தரவை நீக்குவது மருந்து கடத்தல்காரர்களின் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுத்தளத்தை பராமரிக்கும் பொறுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ‘எபிக் லங்கா’ என்ற தனியார் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக துணை மன்றாடியார் நாயகம் மன்றில் தெரிவித்தார்.

இருப்பினும், குறித்த நிறுவனம் தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியது மற்றும் நிறுவனத்தின் அலட்சியத்தால் தரவுகள் நீக்கப்பட்டதாக என்று அவர் குற்றம் சுமத்தினார்.

தகவல்களின் காப்புப்பிரதியை பராமரிக்க, அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சில மருந்து நிறுவனங்கள் ஒரே மருந்தை வெவ்வேறு பெயர்களில் இறக்குமதி செய்கின்றன.

இது மருந்து நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி மருந்துகளின் விலையை நிர்ணயிக்க உதவுகிறது என்று துணை மன்றாடியார் நாயகம் கூறினார்.

இந்தநிலையில், தொடர்புடைய தரவுத்தளத்தை புதுப்பிப்பது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கொழும்பு பிரதான நீதவான் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட தரவுத்தளத்தை புதுப்பிப்பதைத் தடுக்கும் சமீபத்திய உத்தரவு ரத்து செய்யப்படும் என்றும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி புதுப்பிப்பு செய்யப்பட வேண்டும் என்றும் பிரதான நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கை டிசம்பர் 09 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து அன்றைய தினம் அறிக்கை அளிக்கவும், வேண்டும் என குற்றப்புலனாய்வுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE