“மலையக பெருந்தோட்ட அபிவிருத்திக்கான அதிகார சபை செயலிழந்து இருப்பதற்கான காரணத்தை, தோட்ட உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.”

16
கடந்த நல்லாட்சி காலத்தில் மலையக மக்களின் பல உரிமை சார்ந்த விடயங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுக்கொடுத்தது. அதிலே மலையக பெருந்தோட்ட அபிவிருத்திக்கான அதிகார சபை மிக முக்கியமானது. ஆனாலும்  அரசாங்கத்தில் இவ்வதிகார சபை செயலிழந்து இருக்கின்றது. பெயரளவில் கூட இதனது எந்த செயற்பாடுகளையும் காண முடியவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
கடந்த 30 வருட காலத்திற்கு மேல் இந்நாட்டில் மலையக பெருந்தோட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான ஒரு அமைச்சாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இருந்து வந்தது. எனினும் அவ்வமைச்சினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான நேரடி அரச தாபனம் ஒன்று அவ்வமைச்சின் கீழ் காணப்படவில்லை.
எனவே அவை முறையற்ற விதங்களிலேயே இடம்பெற்றது. அதில் பல சிக்கல்களும் காணப்பட்டது. அவற்றையெல்லாம் சரி செய்யும் வகையிலேயே பெருந்தோட்ட அபிவிருத்திக்கான அதிகார சபை உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று அதனது எந்த செயற்பாடுகளையும் காணமுடியவில்லை.
இவ்வதிகார சபைக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி எவ்வளவு, இதனூடாக செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைகள் என்ன என்பது தொடர்பாக உரிய அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்.
இன்று மலையகத்தில் தாம் 700 க்கும் அதிகமான வீடுகளை இவ்வாட்சியில் கட்டி முடித்திருப்பதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.
கண்டி மாவட்டத்தில் 2019 ஆகின்ற போது கட்டப்பட்டுக்கொண்டிருந்த 750 க்கும் அதிகமான வீடுகளில் ஒன்று கூட இதுவரையும் முழுமைப்படுத்தப்பட வில்லை. கேகாலை மாவட்டத்தின் கந்தலோயா பகுதியில் அமைக்கப்பட்ட வீட்டு திட்டத்தின்  நிலையும் அவ்வாறே உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருந்த வேலை திட்டங்களே கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
 அவ்வாறாயின் புதிய வீடுகள் எங்கே கட்டப்பட்டது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய வீடுகள் கட்டப்பட்டிருந்தால் அது பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகார சபை  ஊடாக நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்த தாபனமே காணாமல் போயிருக்கின்றது. இதனால் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் முறையாக  நடைபெறவேண்டிய அபிவிருத்திகள் மழுங்கடிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையிலே மலையக பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் வகிபாகம் தொடர்பாக மலையக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
SHARE