சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: இந்திய கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம்

15

 

இந்தியாவில் டில்லி மற்றும் மும்பையில் அமைந்துள்ள கனேடிய தூதரக அலுவலகங்கள், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பெண் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

அவ்வகையில், உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கிஷான்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தீபிகா என்ற 21 வயது இளம்பெண், ஒரு நாள் மட்டும் கனடா உயர் ஸ்தானிகராக பொறுப்பேற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச பெண் குழந்தைகள் தினமான இன்று (அக்டோபர் 11ஆம் திகதி) ஒரு நாள் மட்டும், கனடா உயர் ஸ்தானிகராக பொறுப்பேற்றுள்ள தீபிகா, கனடா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை பின்தொடர்வோருடன் காணொளி வாயிலாக சந்திப்பு ஒன்றில் பங்கேற்கிறார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சம உரிமைகள் குறித்து அவர் கலந்துரையாடுகிறார்.

இந்த கலந்துரையாடலில், இந்தியாவுக்கான கனேடிய இணை உயர் ஸ்தானிகரான Amanda Strohan, காணொளி வாயிலாக பங்கேற்க இருக்கிறார்.

இவர்களுடன், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், ஜப்பான் மற்றும் பெல்ஜியம் நாடுகளின் தூதரக அதிகாரிகளும், UNICEFஇன் பிரதிநிதிகளும் பங்கேற்று விவாதங்களில் ஈடுபட உள்ளார்கள்.

அத்துடன், மும்பையிலுள்ள கனேடிய தூதரக அலுவலகம், பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மும்பை மற்றும் குஜராத்திலுள்ள முக்கிய கட்டிடங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பெண் குழந்தைகளின் சம உரிமை குறித்த செய்தியை உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE