சம்மந்தி ஆகிவிட்ட இந்தியாவும் சீனாவும்

395
china_india_001
சீன அதிபர் ஜீ ஜின்பிங், தனது இந்திய விஜயத்திற்கு முன்னால், இலங்கைக்கும், மாலைதீவுக்கும் அரசுமுறைப் பயணமாகச் சென்றதுகூட, ஒருவகையில், இந்தியாவை எச்சரிப்பதற்காகவும், தெற்கு ஆசியாவைப் பொருளாதார சக்தியாக மாற்ற விரும்பும் நரேந்திர மோடியின் முயற்சியை முறியடிப்பதற்காகவும்தான் என்று தோன்றுகிறது.

சீனர்களுக்குப் பொருளாதார வளர்ச்சியுடன், தங்களது எல்லையையும் விஸ்தரிக்க வேண்டும் என்கிற தணியாத தாகமுண்டு. ஆசியாவின் தலைமையிடமாக பெய்ஜிங் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதும், உலக வல்லரசாகச் சீனா திகழ வேண்டும் என்பதும்தான் சீனர்களின் குறிக்கோள். இந்தப் பின்னணியில்தான் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் இந்திய விஜயத்தை நாம் பார்க்க வேண்டும்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்து டில்லியில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போது, ஏறத்தாழ 1000 சீன இராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்திருப்பதைத் தற்செயலாக நடந்த நிகழ்வாகவோ, எதிர்பாராத சம்பவமாகவோ கருதிவிட முடியாது.

china_india_002

ஜம்மு – காஷ்மீர் லடாக் பகுதியின் லேயிலிருந்து 300 கி.மீ. தொலைவில் ஹிமாச்சல பிரதேசத்தை ஒட்டிய சுமர் பகுதிக்குள் சீன இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்திருப்பதுடன், அங்கிருந்து அகலவும் மறுக்கிறார்கள் என்றால், இது பெய்ஜிங்கிலுள்ள சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத் தலைமையகத்தின் வழிகாட்டுதல் இல்லாமல் நடந்திருக்காது. சீன அதிபருக்குத் தெரியாமலும் இருந்திருக்காது.

சீன எல்லைக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்த சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்திருக்கிறார்கள். இந்திய எல்லையில் 5 கி.மீ. உள்ளே உள்ள திபில் என்கிற கிராமம் வரை சாலை அமைக்க உத்தரவு வந்திருப்பதாகத் தெரிவித்த அந்தப் பணியாளர்களை எல்லைக்கு வெளியே அனுப்ப முற்பட்ட 100 இந்திய இராணுவ வீரர்கள் சீன இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு, இப்போதுவரை பிரச்சினை தொடர்கிறது.

இந்திய எல்லைக்குட்பட்ட பல பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடுவது ஒன்றும் புதிதல்ல. அருணாச்சலப் பிரதேசத்தை எந்தவிதத் தொடர்பு இல்லாமல், தெற்குத் திபெத் என்று உரிமை கோருகிறது. அக்சாய் சின் பகுதியை ஏற்கனவே கைப்பற்றி வைத்துக் கொண்டிருக்கிறது.

china_india_001

கடந்த பல ஆண்டுகளாக இந்திய எல்லையை அடுத்த சீனப் பகுதிகளில் சாலைகள், விமானத் தளம் உள்ளிட்ட எல்லா கட்டமைப்பு வசதிகளையும் சீனா உருவாக்கித் தயார் நிலையில் வைத்திருக்கிறது. இதற்கு முன்னால் இருந்த இந்திய அரசுகள் எதுவுமே அதற்குக் கண்டனம் தெரிவிக்கவோ அதைத் தடுத்து நிறுத்தவோ, ஏன், கவனத்தில் எடுத்துக் கொள்ளவோ இல்லை. 2014ம் ஆண்டில் மட்டும் 300ற்கும் அதிகமான தடவைகள் சீன இராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறது.

சீன அதிபர் ஜீ ஜின்பிங், தனது இந்திய விஜயத்திற்கு முன்னால், இலங்கைக்கும், மாலைதீவுக்கும் அரசுமுறைப் பயணமாகச் சென்றதுகூட, ஒருவகையில், இந்தியாவை எச்சரிப்பதற்காகவும், தெற்கு ஆசியாவைப் பொருளாதார சக்தியாக மாற்ற விரும்பும் நரேந்திர மோடியின் முயற்சியை முறியடிப்பதற்காகவும்தான் என்று தோன்றுகிறது.

ஏற்கனவே பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நெருக்கமான நல்லுறவு தொடர்கிறது. இப்போது, நேபாளம், பூட்டான், வங்க தேசம் போன்ற இந்திய ஆதரவு நாடுகளில் எல்லாம் தனது முதலீடுகளின் மூலம் சீனா நெருக்கமான நல்லுறவை வலுப்படுத்திக் கொண்டு விட்டிருக்கிறது.

கொழும்பிலும், மாலைதீவிலும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு அளிக்கப்பட்ட உற்சாகமான வரவேற்பு, எந்த அளவுக்குத் தனது பொருளாதார பலத்தால் இலங்கையையும், மாலைதீவையும் சீனா வளைத்துப்போட முற்பட்டிருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.

இந்தியாவுடனான மாலைதீவு விமான நிலைய நிர்மாணப் பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இலங்கையிலும், மாலைதீவிலும் சீனா நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இந்துமகா சமுத்திரப் பகுதிகளைத் தனது அதிகார வளையத்துக்குள் வைத்துக்கொள்ள சீனா நினைப்பதுதான் அதற்குக் காரணம்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும், வடகிழக்கு மாகாணங்கள் சிங்களவர்களின் பேரினவாதத்தால் பாதிக்கப்படாமலும் இருக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமே, இந்துமகா சமுத்திரப் பகுதி அன்னிய ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் சென்றுவிடக்கூடாது என்பதால்தான்.

அவருக்குப் பிறகு வந்த இந்திய ஆட்சியாளர்கள் அவரது இராஜதந்திரத்தை உணராமல் போனதன் விளைவைத்தான், இப்போது சீனா அறுவடை செய்து கொண்டிருக்கிறது.

எல்லைப் பிரச்சினைக்குத்தான் முன்னுரிமை என்று தீர்மானமாகச் சீன அதிபரிடம் வலியுறுத்தி இருப்பதும், ஜப்பான், அவுஸ்திரேலியா, வியட்நாம் போன்ற சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதும் பிரதமர் நரேந்திர மோடியின் இராஜதந்திரப் பதில்கள் என்றாலும்கூட, இந்த உறவில் ஏதோ நெருடல் இருக்கிறது. எதற்கும் கவனமாக இருப்பது நல்லது.

 

SHARE