அடைமழையால் வெள்ளக்காடாகிறது கிளிநொச்சியின் வீதிகள், மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்:-

257
நாட்டின் பல பகுதிகளிலும் அடைமழை பெய்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் தொடரும் அடை மழைகாரணமாக கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன. அத்துடன் வீதிகள் வெள்ளக்காடுகளாக காட்சியளிக்கின்றன.
நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் தொடங்கிய மழை இன்று காலையை கடந்தும் நீடித்து வருகின்றது. இதனால் கால்வாய்கள், வாய்க்கல்களை மேவி வெள்ள நீர் பாய்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்களில் வீடுகள் வெள்ள நீர் நுழைந்துள்ளதால்  மக்கள் இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.
வீதிகளில் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத அளவில் வெள்ள நீர் பாய்கின்றது. புனரமைக்கப்படாத கராமங்களுக்கான உள்வீதிகளில் காணப்படும் கிடங்குள் போன்ற அபாயங்களை கடப்பதில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தற்காலிக வீடுகளில் வசிக்கும் மக்களின் நிலைமையே மிகவும் பரிதாபகரமாக காணப்படுகின்றது. தொடரும் அடை மழையின் வெள்ளம் ஒரு புறமும் காலம் கடந்த கூரைத்தகடுகளின் ஒழுக்குகள் ஒருபுறமுமாக வீட்டில் வசிக்க முடியாத நிலமையை தோற்றுவித்துள்ளது
கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. மருதநகர், இரத்தினபுரம், புன்னை நீராவி, சிவபுரம், பரந்தன், தர்மபுரம், கனகாம்பிகைக்குளம், முறிகண்டி போன்ற பல கிராமங்கள் இவ்வாறு மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன
SHARE