அவுஸ்திரேலிய அரசுக்கு பாரிய தலையிடி! கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கியதை இந்தோனேசியா நிரூபித்தது!

285

54 இலங்கை அகதிகள் உட்பட 65 பேரை  ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்பி அதிலிருந்த கடத்தல்காரர்களுக்கு பெருந்தொகை பணத்தை அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கினார் என்பதற்கான ஆதாரத்தை இந்தோனேசியா வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கடத்தல்காரர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் பணத்தை இந்தோனேசிய அதிகாரிகள் காணப்பி;த்துள்ளனர்.

இதில் பல ஆயிரக்கணக்கான அமரிக்க டொலர்கள் காணப்படுகின்றன என்று சிட்னி மோனிங் ஹெரல்ட் தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய நுஸா டென்காரா திமுர் மாகாணத்தின் பொலிஸ் தலைமை அதிகாரி ஜெனரல் என்ட்டாங் சுன்ஜாயா இந்த பணத்தை காணப்பிக்கும் புகைப்படத்தையும் அவுஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்டுள்ளது.

எனவே தற்போது பதில் கூறவேண்டிய கடப்பாடு அவுஸ்திரேலிய அரசாங்கம் வசம் உள்ளதாக குறித்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடத்தல்காரர்கள் 6 பேரும் தாம் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் இருந்து பணத்தை பெற்றதாக சத்தியம் அளித்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இது புனையப்பட்ட செய்தி அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இது குறித்த விசாரணைகள் தற்போது ஜகார்த்தாவில் உள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது இந்தோனேசிய சட்டப்பட்ட ஒரு லஞ்ச நடவடிக்கையாகும்.

இந்தநிலையில் அவுஸ்திரேலியாவின் மனிதாபிமானம் குறித்து கேள்வி எழுவதாக திமுர் மாகாண கடத்தல்களுக்கு எதிரான அமைப்பின் தலைவர்; இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தல்காரர்கள் 6பேரையும் விசாரணை செய்த அவர், அதில் முதன்மை மாலுமியான யொஹான்ஸ் என்பவர், அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் பணத்தை பெற மறுத்ததுடன் அகதிகளை நியூஸிலாந்துக்கு கொண்டு செல்ல துணிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரியான ஆகஸ் என்பவர் தொடர்ந்தும் பேச்சு நடத்தி யோஹான்ஸூக்கு 5000 டொலர்களை வழங்கியதாகவும் விசாரணையாளர் தெரிவித்துள்ளார்.

SHARE