ஆம்புலன்ஸ் வண்டியில் கர்ப்பிணித்தாய்க்கு பிரசவம் – விசாரணைக்கு சுகாதார அமைச்சர் உத்தரவு

459
ஆம்புலன்ஸ் வண்டியொன்றில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் குழந்தை பிரசவிக்க நேர்ந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் பொலன்னறுவை ஹிங்குராக்கொடையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மின்னேரிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த வாரம் பிரசவ வலி எடுத்த நிலையில் ஹிங்குராக்கொடை மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

எனினும் அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்காது, ஆம்புலன்ஸ் வண்டியொன்றின் மூலம் பொலன்னறுவை போதனா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

எனினும் இடைவழியில் குறித்த பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டுள்ளது.அதன்போது ஆம்புலன்ஸ் வண்டியில் மின்விளக்குகள் எரியாத நிலையில்,

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் வேன் ஒன்றின் முகப்பு வெளிச்சத்தின் உதவியில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் தாயும், சேயும் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்த தகவல் அறியக் கிடைத்தவுடன் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

SHARE