இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் வனஇலாகா அதிகாரிகள் -ஆனந்தன் எம்.பி

254
வவுனியா பூம்புகார் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை வனஇலாகா திணைக்களத்துக்கு உரிய காணிகள் என்று அடையாளம் இட்டு அக்காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை வனஇலாகா அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அச்சமும் கவலையும் அடைந்துள்ள கிராம மக்கள், கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.

இன்று (15.03.2015) நடைபெற்ற பூம்புகார் கண்ணகி விளையாட்டுக்கழக விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஆனந்தன் எம்.பியிடம் கிராம மக்கள் தெரிவித்ததாவது,

1977ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டு, அங்கிருந்து இடம்பெயர்ந்துவந்து வவுனியா பூம்புகார் கிராமத்தில் குடியேறி வசித்து வந்த நிலையில், தொடர் போர்ச்சூழல் காரணமாக நான்கு தடைவைகள் (1990, 1994, 1996, 2003 ஆண்டுகள்) இடம்பெயர்ந்து, மடு, தட்சணாமருதமடு, முள்ளிக்குளம், கனகராயன்குளம், முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்.

இதில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் குடும்ப அங்கத்தவர்களை இழந்து, பெரும் சொத்தழிவுகளை சந்தித்து, எவ்வித வாழ்வாதார உதவிகளும் இன்றி மீளக்குடியேறியிருக்கும் நிலையில், தற்சமயம் நாம் குடியிருக்கும் காணிகளையும், மேட்டுக்காணிகளையும் சுவீகரிப்பதற்கு வனஇலாகாவினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். இவற்றில் கடந்த கால அசாதாரண சூழல்கள் காரணமாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்று இன்றுவரை நாடு திரும்ப முடியாதுள்ள 22 குடும்பங்களுக்குரிய காணிகளும் உள்ளடங்குகின்றன.

மேலும் வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட எல்.டி.ஓ அனுமதி பத்திரங்கள், பற்றுச்சீட்டுகள் உள்ள காணிகளும் அடங்குகின்றன. தமக்கு சொந்தமான காணிகளில் தாம் குடியிருப்பதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தும் வனஇலாகா அதிகாரிகள், தமது பிரச்சினையை காது கொடுத்துக்கேட்பதாயில்லை என்று கவலை தெரிவித்த கிராம மக்கள், தமது கிராமத்துக்கு அண்மையாக உள்ள பாழடைந்துள்ள குளத்தை புனரமைத்து தந்தால், அக்குளநீர் தமது வாழ்வாதாரத்தொழிலான விவசாய செய்கைகளுக்கு பெரிதும் நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தனர்.

வன்னி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் கணக்கான காடுகளை அழித்து பெறுமதிமிக்க பயன்தரும் மரங்களை பாதுகாப்பு தரப்பினரும், வன்னி அமைச்சரும் விற்று இலாபம் ஈட்டி வருவதை கைகட்டி வாய்கட்டி நின்று வேடிக்கை பார்க்கும் வனஇலாகாவினர், தினக்கூலிக்கு தமது அன்றாட வாழ்க்கை சீவியத்தை நடத்தும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயல்வது அநீதியான செயலாகும் என்று தெரிவித்துள்ள ஆனந்தன் எம்.பி,

இனக்கலவரங்கள், போர்ச்சூழல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த புதிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய தீர்வை பெற்றுத்தருவோம் என்றும் தெரிவித்தார்.

பூம்புகார் கண்ணகி விளையாட்டுக்கழக தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் வன்னி எம்.பிக்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் பரமேஸ்வரன் (பாபு), கல்மடு பாடசாலை அதிபர் திரு.செல்வதேவன், கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ஜெகதீபன், பொருளாளர் ராம்குமார், கழக உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

SHARE