இரட்டை குழந்தைக்கு தாயான பிரபல நடிகை

221

கனடாவைச் சேர்ந்தவரும், நடிகையுமான லிசா ரே புற்றுநோயில் இருந்து மீண்டு, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடா நாட்டில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடிகை லிசா ரே. இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து பிரபலமானவர்.

கடந்த 2009ஆம் ஆண்டு மைலமோ எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லிசா ரே, 2010ஆம் ஆண்டில் தான் ஸ்டெம்செல் சிகிச்சையில் இருப்பதாக அறிவித்தார். ஆனால், இது அபூர்வமான புற்றுநோய் என்பதால் அவர் முழுமையாக குணமடையவில்லை.

எனினும், 2012ஆம் ஆண்டு கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜேசன் டேனி என்பவரை லிசா ரே திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், வாடகைத் தாய் மூலமாக தற்போது இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இதுதொடர்பாக லிசா ரே கூறுகையில், ‘2009ஆம் ஆண்டில் எனக்கு ரத்த புற்றுநோய் இருப்பது தெரிந்ததும், வாழ்நாள் முழுவதும் மருந்துகளுடன், குழந்தை பேறில்லாமல் வாழ வேண்டியிருக்கும் என நினைத்தேன்.

ஆனால், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் புற்றுநோய் குணமானதுடன், வாடகை தாய் மூலம் குழந்தைகளுக்கு தாயாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

புற்றுநோய்க்கு எதிரான என் பயணம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குழந்தை பேறுக்காக ஏங்குவோருக்கு நம்பிக்கை அளிக்கும் என நம்புகிறேன்.

வாழ்க்கை நமக்கு சவால்களையும், அற்புதங்களையும் வழங்குகிறது. என் செல்ல மகள்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

லிசா ரே-ஜேசன் டேனி தம்பதியர் தங்களது குழந்தைகளுக்கு சூஃபி, சோலேய்ல் என பெயரிட்டுள்ளனர்.

SHARE