இலங்கையில் தமிழினத்தின் இருப்பை அழிக்கும் புதிய ஆயுதம்

98

தமிழினத்தின் இருப்பை அழிப்பதற்கு இறுதி ஆயுதமாக போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது இன்று மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும் என வடமாகாண உடற் கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது

“காலம் காலமாகப் பெண்களைப் பெருமையுடன் பேணிவந்த தமிழினம் இன்று ஆறு வயது முதல் அறுபது வயது வரையிலான பெண்களை குழந்தை, முதுமைப் பெண் என்று பாராது மிலேச்சத்த னமான முறை சிதைத்து செல்வது கொடிய அரக்க குணம் கொண்டவர்கள் உருவாகிவிட்டார்களா ? என மக்கள் அச்சம் கொள்ளும் அளவுக்குச் சிறுமியின் படுகொலையும் முதுமைப் பெண்ணின் உடலில் காணப்பட்ட காயங்களும் எடுத்துக் காட்டுகின்றன.

எனவே இந்தப் போதைப் பொருள் பாவனையை முற்றுமுழுதாகத் தடைசெய்ய வேண்டும். இல்லையேல் தமிழர் என்ற இனம் என்ற வரலாறு சிதைக்கப்படும்.

இதனைக் கருத்தில் கொண்டு எமது அரசியல் தலைவர்கள் கொள்கை அளவில் வேறுபட்டாலும் இந்த விடயத்தில் உடன்பட்டு, ஒன்றுபட்டு கருத்தொருமித்து தமிழரின் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பதுடன் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயப் பீதியைப் போக்க நம்பிக்கை ஏற்படும் வகையில் செயற்பட வேண்டிய தார்மீக கடமையாகும்.

இன்றைய நிலையில் மக்கள் சொந்த வீட்டில் இருப்பதற்கே பாதுகாப்பற்ற நிலை தோன்றி உள்ளது. இதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுவது போதைப் பொருள் இளைஞர்கள் மத்தியில் விதைக்கப்பட்ட மையே.

இதனை எவ்வாறு தடை செய்வது என்பது எங்கிருந்து வருகின்றது என்பதை அறிந்தாலே முடியும். எனவே வித்தியா, றெஜினா எனத் தொடர்கதையாக்காமல் இதனுடன் முற்றுப் புள்ளி இட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE