யாழ்ப்பாணம் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பார்வையிட்டுள்ளார்.
இவர் நேற்று மாலை குறித்த பகுதிக்கு விஜயம் செய்து இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டத்தை பார்வையிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தொடர்ந்தும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வந்திருந்த காணிகள் அற்ற 129 குடும்பங்கள் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் குடியேற்றப்பட்டனர்.
இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களில் முதற்கட்டமாக 100 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் உதவியுடன் ஸ்ரீலங்கா இராணுவம்இ தலா 25 இலட்சம் ரூபா செலவில் அனைத்து வசதிகளுடனும் கூடிய இந்த வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றய தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை தொடர்ந்து மாலை 3.30 மணியளவில் குறித்த வீட்டு திட்டத்தை பார்வையிட்டார்.
இந்த விஐயத்தின்போது யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மகேஷ்சேனநாயக்காவும் கலந்து கொண்டார்.
இதேவேளை வலிகாமம் வடக்கு பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானோரின் காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
அந்த மக்களின் காணிகளை அரசாங்கம் கட்டம் கட்டமாக விடுவித்து வரும் நிலையில் எஞ்சிய காணிகளை விடுவிக்குமாறு வலிகாமம் வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.